ஓராண்டு கால திமுக ஆட்சி மக்களுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது: கொமதேக கருத்து
கொமதேக பொதுச்செயலரும் எம்எல்ஏ-வுமான ஈ.ஆர். ஈஸ்வரன்
ஓராண்டுகால ஆட்சியில் முதலமைச்சர் மக்களுக்கு பாதுகாப்பு உணர்வையும், நம்பிக்கையையும் கொடுத்திருக்கின்றார் என்றார் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சர் பொறுப்பேற்று முதல் ஆண்டு நிறைவுறும் இந்த தருணத்தில் கடந்த ஓராண்டின் சூழ்நிலைகளையும், நிகழ்வுகளையும் திரும்பிப் பார்க்கின்றேன்.
நான்கு மாதங்கள் கொரோனா தீவிர தாக்குதல், இரண்டு சட்டசபை கூட்டத் தொடர்கள், மூன்று மாதம் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் மொத்தமாக பத்து மாதங்களை ஓராண்டில் இழந்த நிலையிலும் தமிழகத்தில் நடைபெறுகின்ற ஆட்சி உலக மக்களால் பேசப்படுகிறது என்றால் முதலமைச்சர் உழைப்பு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
துறை வாரியாக தொடர்ந்து ஆய்வு கூட்டங்களை நடத்தி வீழ்ந்து கிடந்த நிர்வாகத்தை தூக்கி நிறுத்தி இருப்பதற்கு எங்களின் பாராட்டுகள். கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்க தொழில் முதலீட்டாளர்களை நாடு முழுவதும் இருந்தும், நாடு கடந்தும் ஈர்த்து வேலை வாய்ப்புகளை பெருக்கி இருப்பதற்கு நன்றிகள் பல. சமூகநீதி தளத்தில் விழிம்பு நிலை மக்களுக்கு விடியலை ஏற்படுத்தி கொடுத்திருப்பதை வரவேற்கின்றோம். தவறு செய்தவன் தம் கட்சிக்காரன் என்றாலும் தயங்காமல் நடவடிக்கை எடுத்து சட்ட ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருப்பதையும் வரவேற்கின்றோம்.
மறைக்கப்பட்ட தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள், தமிழக அறிஞர்கள், விஞ்ஞானிகள் போன்ற அனைவரையும் அடையாளப்படுத்தி, கௌரவப்படுத்திருப்பதை பாராட்டுகின் றோம். அனைத்துக்கட்சி சார்ந்தவர்களையும், கட்சியே சாராதவர்களையும் சம தட்டில் நிறுத்தி கண்ணியத்தோடு செயல்படுவதை காணும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.நிர்வாக சீர்திருத்தங்கள் இன்னும் நிறைய பாக்கி இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டு அதை சீராக்க தங்களுடைய தொடர் முயற்சிகளை புரிந்து கொள்கிறோம். முதலமைச்சர் ஒரு களப் போராளி என்பது அனைவரும் அறிந்த விஷயம்.
தமிழக முதலமைச்சர் ஆன பின் தன் கள போராட்டங்களை பல மடங்காக அதிகரித்து இருப்பது எதிர்பாராத ஆச்சரியத் தை கொடுத்திருக்கிறது. வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்பட் டாலும், தேரோட்டத்தில் விபத்துக்கள் நடந்தாலும் ஓடோடிச் சென்று களத்தில் நேரடியாக மீட்பு நடவடிக்கைகளில் இறங்கி பணியாற்றுவதை நினைவு கூறுகின்றோம். அனைவருக்குமான அரசு என்று தொடங்கி 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி பயணத்தை தொடங்கி இருக்கின்ற தங்களுடைய முன்னெடுப்பு வெற்றி பெற வேண்டுமென்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக வாழ்த்துகின்றோம்.
இந்தியாவின் சிறந்த முதலமைச்சர் என்ற பாராட்டை விட சிறந்த மாநிலம் தமிழகம் என்ற தங்களுடைய ஆசை நிறைவேற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியும், கொங்கு நாட்டு மக்களும் துணை நிற்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu