சொகுசு கார் நுழைவு வரி ரத்து விவகாரம், மேல் முறையீடு செய்தார் நடிகர் விஜய்
நடிகர் விஜய்
நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகிய போது, வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து, காரை இறக்குமதி செய்த போது, இறக்குமதி வரி செலுத்தியுள்ள நிலையில், நுழைவு வரி விதிக்க தடை விதிக்க வேண்டும் என விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என கருத்து தெரிவித்திருந்தார்.
மேலும், நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அதை முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்களுக்கு நுழைவு வரி விலக்கு அளிக்க கோரி ஏற்கனவே பல வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் தான்,
தானும் நுழைவு வரிக்கு விலக்களிக்க கோரியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது அதே போல,அபராதத்தை ரத்து செய்ய வேண்டுமெனவும், தன்னை பற்றி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள விமர்சனங்களை நீக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த போது,இந்த விவகாரத்தை வரி தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்ற பதிவுத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனை தொடர்ந்து, விஜய் மேல்முறையீடு மனு நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu