ஜனவரி 12 ம் தேதி உலகத்தமிழ் நாளாக கொண்டாடப்படும்: ஆளுநர் உரையில் அறிவிப்பு

ஜனவரி 12 ம் தேதி உலகத்தமிழ் நாளாக கொண்டாடப்படும்: ஆளுநர் உரையில் அறிவிப்பு
X

தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய தமிழக ஆளுநர் ரவி

மழை, வெள்ள பாதிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு ரூ.6230 கோடி நிதி மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது என ஆளுநர் உரையில் தெரிவித்தார்

ஒமைக்ரான் பரிசோதனை நடத்தும் ஆய்வகம் முதலில் அமைந்தது தமிழ்நாட்டில்தான் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில் குறிப்பிட்டார்.

மேலும் அவர் தனது உரையில் மேலும் கூறியதாவது: இலங்கை தமிழர் நலனுக்காக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இலங்கை தமிழரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இலங்கை சிறையில் உள்ள 68 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.உயர்கல்வியில் தரமான பாடத்திட்டத்தை சேர்த்து மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் பாடத்திட்டத்தை மாற்றியமைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வருவாய் இழப்பை ஈடுகட்ட மத்திய அரசை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.விவசாயிகளின் வளர்ச்சிக்கு அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. வரலாறு காணாத அளவுக்கு இந்த ஆண்டு குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டது. மழை, வெள்ள பாதிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு ரூ.6230 கோடி நிதி மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 25,345 அரசு தொடக்கப் பள்ளிகள் அனைத்திலும் திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்படும். நுழைவுத் தேர்வுகள் கிராம மாணவர்களிடையே பாரபட்சத்தை ஏற்படுத்துகிறது.

நீட் போன்ற நுழைவு தேர்வுகள் உயர்கல்விக்கு தேவை இல்லை என்று தமிழ்நாடு அரசு கருதுகிறது. நீட் தேர்வு தேவையில்லை என்ற நிலையில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. ஜனவரி 12ம் தேதி உலகத்தமிழ் நாளாக கொண்டாடப்படும். உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அதிகாரங்களை வழங்கி ஜனநாயகத்தை காப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. மிக விரைவில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவுள்ளது.

தமிழகத்தில் உள்ள பெரியார் நினைவு சமத்துவப்புரம், நூலகங்கள் மேம்படுத்தப்படும்.500 கோடி ரூபாயில் சிங்கார சென்னை திட்டம் செயல்படுத்தப்படும்.10 வருடத்தில் தமிழ்நாடு குடிசை இல்லாத மாநிலமாக மாற்றப்படும்.தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில அரசின் பாடலாக அறிவித்து அரசு நிகழ்ச்சிகள், கல்வி நிலையங்களில் பாடப்படுகிறது. தனியார் நிகழ்ச்சிகளிலும் பாடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். உயர்க்கல்வி பாடத்திட்டங்கள் மேம்படுத்தப்படும். மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கப்படும் என தனது உரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!