ஜானகியை போல சசிகலாவும் அதிமுகவை விட்டுக்கொடுக்கணும் - முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்
பைல் படம்
அதிமுக அவைத்தலைவர் மதுசசூதனன் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று அவர் கவலைக்கிடமாக உள்ளதாக வந்த தகவலையடுத்து, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று உடல்நலம் விசாரித்தார்.
எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனையில் நலம் விசாரிக்கும் போதே, சசிகலாவும் மருத்துவமனைக்கு வந்தார். அப்போது அவரின் காரில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது. இதனால், அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனை சந்திப்பது என்பது ஒர் ஆரோக்கியமான விஷயம்தான். அது விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது.
கட்சியில் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லாத சசிகலா அதிமுக தனது குடும்பம் என்பது நகைப்புக்குரியது. அதிமுக கட்சி கொடி கட்டிய காரில் சசிகலா செல்வதை ஏற்க முடியாது. அதிமுக கட்சிக் கொடியை பயன்படுத்த எந்த உரிமையும் இல்லாதவர்; கொடி கட்டுவது தேவையற்ற நடவடிக்கை; அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்தார்.
மேலும், ஜெயலலிதா தலைமையேற்க எம்ஜிஆர் மனைவி வி.என். ஜானகி விட்டுத் தந்ததுபோல, பெருந்தன்மையோடு கட்சியை சசிகலா விட்டுக்கொடுக்க வேண்டும். அதிமுக ஜானகி - ஜெயலலிதா அணி என பிரிந்து இருந்தபோது ஜானகி அம்மாள் எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி என்னால் பிரியக்கூடாது, கட்சி தொடர்ந்து இயங்க வேண்டும் என்று கூறி விலகிக் கொண்டார். அதேபோல அதிமுக இணைப்பிற்காக சசிகலா தடையாக இருக்கக் கூடாது என்றும் ஜெயகுமார் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu