கோவில் நிலங்களை ஆக்கிரமித்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு
சென்னை சாலிகிராமத்தில் அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்தபோது.
சென்னை வடபழனி கோயிலுக்கு சொந்தமான, கருணாநிதி தெரு, காந்திநகர், சாலிகிராமத்திலுள்ள 250 கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்கிரமிப்பு சொத்துக்கள் மீட்பு பணி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆணையர் குமரகுருபரன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, சென்னை வடபழனி கோவில் நிலம் காந்திநகர், கருணாநிதி தெருவில், ஆக்கிரமித்து பார்க்கிங் மூலம் பல லட்சம் ரூபாய் சம்பாதிதுள்ளனர். இதனை சட்டமன்ற உறுப்பினர்கள் கருணாநிதி , பிரபாகர் ராஜா ஆகியோர் முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
அதன் தொடர்ச்சியாக தற்போது இவ்விடத்தினை இந்து சமய அறநிலையத்துறை இன்று முதல் கையகப்படுத்தியுள்ளது. காலி செய்ய 24மணி நேரம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பிருந்தவர்கள் செய்த தவறுகளை திருத்திக்கொண்டால் நடவடிக்கைகள் எடுக்கமாட்டோம். ஆனால் அரசுக்கு வரும் வருவாயை தடுக்கும்பட்சத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இங்கு உள்ள விடுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதால் மூடிவிட்டதாக கூறுகிறார்கள். விரைவில் இது பயன்பாட்டிற்கு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது ட்ரைலர் தான். மெயின் பிச்சரை இனி பார்ப்பீர்கள். போக போக தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளை. திருக்கோவில் வருமானத்திற்கு தடையாக உள்ளதை தடுத்து திருக்கோவிலுக்கு வருமானம் கிடைக்க வழி வகுக்கப்படும்.
பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் தற்பொழுது கைப்பற்றப்பட்ட இடத்தை மாற்றுவோம். இதனை விரைவில் முதல்வர் அறிவிப்பார். 15 ஆண்டுகள் ஒரே இடத்தில் குடியிருந்தால் அவர்களுக்கு அதனை வாடகைக்கு அவர்களுக்கே கொடுக்கப்படும்.
தவறு எங்கு நடைபெற்றாலும் முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றால் யாராக இருந்தாலும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்யப்படும் கோவில்களை கண்காணித்து தமிழில் அர்ச்சனை செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu