சென்னையில் நாளையும் புறநகர் ரயில்கள் ரத்து
சென்னை புறநகர் ரயில் - கோப்புப்படம்
மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் நேற்று மாலை முதல் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கிண்டி, வேளச்சேரி, பரங்கிமலை, எழும்பூர், மாம்பலம், மடிப்பாக்கம், பெரம்பூர், அண்ணாநகர், ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், அரும்பாக்கம், தாம்பரம், நுங்கம்பாக்கம் உள்பட நகரின் பல பகுதிகளில் நள்ளிரவு முதல் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
இதற்கிடையே, புயல், கனமழை காரணமாக சென்னை புறநகர் மின்சார ரயில்கள் அனைத்தும் இன்று காலை 8 மணி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சேத விவரங்களை அறிந்த பின்னர் மின்சார ரயிலை மீண்டும் இயக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் ரயில்வே தெரிவித்து இருந்தது.
அதன்படி இன்று காலை முதல் ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை சிறப்பு ரயில்களாக இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. ரயில்கள் செல்லும் பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால், பொறுமையாக ரயில்களை இயக்குமாறு லோகோ பைலட்டுகளுக்கு உத்தரவிட்டுருந்தது. ஆனால் தொடர் கனமழை காரணமாக ரயில்கள் சரிவர இயக்கப்படவில்லை. நாளையும் புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்நிலையில் மெட்ரோ ரயில் சேவை நாளை இயங்கும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் கூறியிருப்பதாவது:-
செயிண்ட் தாமஸ் மவுண்ட் மெட்ரோ ரயில் நிலையத்தில் 4 அடி அளவுக்கு தண்ணீர் தேங்கி உள்ளதால், பயணிகள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சேவை முடங்கி உள்ளதாகவும் பயணிகள் ஆலந்தூரில் ரயில் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் வரும் சாலையில் தண்ணீர் வெள்ளம் போல வருவதால், ரோஹினி தியேட்டர் அருகே உள்ள நடைமேம்பாலம் வழியே வருமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலைய சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால், அங்கு வருவது பயணிகளுக்கு சற்றே கடினமாக இருக்கும். அரசினர் தோட்ட மெட்ரோவுக்கு வாலாஜா சாலை சப்வே சாலை மூடப்பட்டுள்ளதாகவும் பயணிகள் பிற வழிகள் மூலம் அரசினர் தோட்ட மெட்ரோ ரயில் நிலையத்துக்குச் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வழக்கம் போல ரயில் சேவை காலை 5 மணி முதல் இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற ரயில் நிலையப் பகுதிகளில் தண்ணீர் அளவு பெரிய அளவில் தேங்கவில்லை என்றும் சென்னை மெட்ரோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu