கார்டு மேலே 16 நம்பர் - போன் எடுக்காதீங்க! ஸ்டேட் வங்கியின் அவசர எச்சரிக்கை
2 செல்போன் எண்களில் இருந்து அழைப்புகள் வந்தால் எடுக்க வேண்டாம் என்று வாடிக்கையாளர்களுக்கு ஸ்டேட் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுவதும் வங்கி கணக்குதாரர்களை மையப்படுத்தி நடக்கும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு அனைவரும் கட்டாயம் வங்கிக்கணக்கு வைத்திருக்க வேண்டும் என நிர்பந்தம் ஏற்பட்டதால் வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளன.
படிக்காத ஏழை பாமர மக்கள் கூட வங்கிக் கணக்குகளையும், ஏடிஎம் இயந்திரங்களையும் பயன்படுத்த தொடங்கி விட்டனர். இத்தகையவர்களை குறிவைத்து மோசடி செய்ய இந்தியாவில் ஒரு பெரிய நெட்வொர்க்கே செயல்பட்டு கொண்டிருக்கிறது. வங்கியிலிருந்து அழைப்பதாக கூறி அவர்களின் வங்கிக் கணக்கு மற்றும் ஏடிஎம் ரகசிய எண் போன்றவற்றை கேட்டுபெற்று மோசடி செய்து வருகின்றனர்.
குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்த வாடிக்கையாளர்களை வட இந்தியாவை சேர்ந்த மோசடி கும்பல் குறிவைத்து பணம் பறிக்கும் வேலைகளில் இறங்கியுள்ளது. போனை எடுத்தவுடன் அரைகுறை தமிழில் கார்டு மேலே இருக்கும் 16 நம்பர சொல்லுங்க என்று கேட்டு, வங்கி மேனேஜர் பேசுகிறேன் என்று பொய் சொல்லி ஏடிஎம் கார்ட் காலாவதியாக போகிறது என்று பயம் காட்டி விபரங்களை பெற்று பணம் பறித்து வருகிறது.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களிடம் நடந்ததை விசாரித்தால் அனைவர் சொல்வது ஒரே மாதிரியாக இருக்கும். அதைவைத்தே இது மிகப்பெரிய மோசடி நெட்வொர்க் என்பதை அறிய முடியும். வாடிக்கையாளர்கள் சிலர் தங்களுக்கு வரும் இதுபோன்ற அழைப்புகள் மோசடி கும்பலிடம் இருந்து வருகிறது என்பதை அறிந்து விபரங்களை தெரிவிக்க மறுத்துவிடுகின்றனர். அவர்களை கெட்ட வார்த்தைகளால் திட்டி மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிடுகின்றனர் இந்த வட இந்திய மோசடி கும்பலை சேர்ந்தவர்கள்.
இதுகுறித்து காவல்நிலையத்திலும் சைபர் கிரைமிலும் புகாரளித்தும் பயனில்லை என்பதே பாதிக்கப்பட்ட பலரது கருத்தாக உள்ளது. செல்போன் எண்கள் முடக்கப்பட்டாலும், பறிபோன பணம் கிடைக்கவில்லை என்றும் வெவ்வேறு செல்போன் எண்களில் அந்த கும்பல் மோசடியை தொடர்வதாக கூறப்படுகிறது. இந்த மோசடிக்கு ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி என எந்த வங்கி வாடிக்கையாளர்களும் விதிவிலக்கு அல்ல.
இந்த நிலையில்தான், பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதில், வங்கி மோசடிகளை தவிர்க்க விரும்புபவர்கள் +91-8294710946, +91-7362951973 ஆகிய எண்களில் இருந்து வரும் அழைப்பு களை எடுக்க வேண்டாம் என எச்சரித்து இருக்கிறது. எனவே வாடிக்கையாளர்கள் இந்த 2 எண்களையும் தங்கள் மொபைலில் பதிவு செய்து பிளாக் செய்து கொள்வதன் மூலம் அழைப்புகளை தவிர்க்கலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu