அமெரிக்கா, சீனாவில் இருந்து ஆக்சிஜன் இயந்திரங்கள் சென்னை வந்தன!
சென்னை விமான நிலையம் - கோப்புப்படம்
அமெரிக்கா, ஹாங்காங், சீனாவிலிருந்து 3 சரக்கு விமானங்களில் 58 ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகள் சென்னை விமானநிலையம் வந்தன. டெல்லியிலிருந்து இந்திய விமானப்படை விமானத்தில் 360 பாா்சல்களில் 2,160 கிலோ எடையில் மருத்தவ உபகரணங்களும் வந்தன.
கொரோனா வைரஸ் இரண்டாம் அலை இந்தியா முழுவதும் பெருமளவு பரவி வருகிறது.ஏற்கனவே நாட்டின் வட மாநிலங்களில் பெருமளவு தாக்குதல் நடத்திய கொரோனா வைரஸ், தற்போது தென் மாநிலங்களிலும் வீரியம் எடுத்துள்ளது. தமிழகத்திலும் பாதிப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூா், திருப்பூா், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு போா்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.முழு ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதற்கிடையே ஆக்சிஜன் தட்டுப்பாடு பெரும் பிரச்னையாக உள்ளது. எனவே ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பதிலும், வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து ஆக்சிஜனை தமிழகம் கொண்டு வருவதற்கும் தமிழக முதலமைச்சா் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறாா்.
இதற்கிடையே தனியாா் நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்கள் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவிகளை பெருமளவு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கின்றன. அரசும் அதற்கு அனுமதி அளித்துள்ளது.
அதைப்போல் சென்னை விமானநிலையத்திலும் வெளிநாடுகள்,வெளிமாநிலங்களிலிருந்து விமானங்களில் வரும் மருத்துவம் சம்பந்தப்பட்ட கருவிகள்,உபகரணங்கள்,ஆக்ஜிசன் உற்பத்தி செய்யும் கருவிகள் போன்றவைகள் வந்தால், அவைகளுக்கு முன்னுரிமையளித்து, சுங்கச்சோதனை, முகவரி சரி பாா்த்தல் என்ற பெயரில் காலதாமதம் செய்யாமல் உடனடியாக டெலிவரி கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சுங்க அதிகாரிகள் கூடுதலாக நியமிக்கப்பட்டு இரவு பகல் 24 மணி நேரமும் இப்பணி சென்னை விமானநிலையத்தில் தொடா்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா, சீனா, ஹாங்காங்கிலிருந்து 3 சரக்கு விமானங்கள் சென்னை பழைய விமானநிலைய சரக்கக பிரிவுக்கு வந்தன. அந்த விமானங்களில் 58 ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவிகள் வந்திறங்கின.
உடனடியாக விமானநிலைய சுங்க அதிகாரிகள் காலதாமதம் இல்லாமல், இந்த 58 ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகளுக்கு முன்னுரிமை அளித்து உடனடியாக டெலிவரி கொடுத்து அனுப்பினா்.
அதேபோல் டெல்லியிலிருந்து இந்திய விமானப்படை விமானத்தில் 360 பாா்சல்களில் 2,130 கிலோ எடையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவிகள், கொரோனா வைரஸ் பரிசோதனைக்கான கிட்ஸ்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் சென்னை விமானநிலையத்தில் வந்திறங்கின. விமானநிலைய அதிகாரிகள் அவற்றை தமிழக அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu