திருக்கோயில்களில் உடனடி அடிப்படை வசதிகள்- அமைச்சர் சேகர்பாபு உறுதி
அமைச்சர் சேகர்பாபு.
தமிழகத்திலுள்ள முதுநிலை கோயில்களான மதுரை மீனாட்சியம்மன்திருக்கோயில், பழனி ஆண்டவர் திருக்கோயில், திருச்செந்தூர் முருகன் திருக்கோயில் உள்ளிட்ட 47 முதுநிலை கோயில்களில் பணியாற்றும் தலைமை குருக்கள், அர்ச்சகர்கள்,அறநிலையத்துறை அதிகாரிகள் ஆகியோரின் ஆய்வுக்கூட்டம் அறநிலையத் துறை தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அறநிலையத்துறை ஆணையர், இணை ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் மேற்கண்ட 47 முதல் நிலை கோயில்களில் பணியாற்றும் தலைமை குருக்கள் மற்றும் அர்ச்சகர்கள் ஆகியோர் இடத்தில் கோயில்களில் தேவையான அடிப்படை வசதிகள் என்ன, திருப்பணிகளின் நிலை என்ன, என்பது குறித்தும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக கேட்டிறிந்தார்.
அப்போது பேசிய தலைமை குருக்கள் மற்றும் அர்ச்சகர்கள் தங்களது கோயிலின் நிலை குறித்தும், மற்றும் தேவையான அடிப்படை தேவைகள் குறித்தும் விளக்கமாக கூறி கோரிக்கைகள் அளித்தனர்.
மேலும் இதுவரை எந்த அரசாங்கமும் தங்களை அழைத்து இவ்வாறு கோரிக்கைகளை கேட்டதில்லை என்றும், முதன்முறையாக இப்போதுதான் தங்களை அழைத்து கோரிக்கைகள் கேட்கப்படுவதாக கூறி மகிழ்ச்சி தெரிவித்தனர் .
அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக முதல்வர் அவர்களின் வழிகாட்டுதல்படி அறநிலையத்துறை , திருக்கோயில்களை பழமை மாறாமல் பாதுகாக்கும் பணியிலும், பக்கதர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் பணியிலும் தொடர்ந்து 24 மணி நேரமும் பணியாற்றி வருகிறது.
தமிழகத்திலுள்ள 539 முதுநிலை கோயில்களில் முதற்கட்டமாக 47 முதல்நிலை திருக்கோயில்களில் பணியாற்றும் தலைமை குருக்கள், அர்ச்சகர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் ஆகியோரை அழைத்து ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் அவர்கள் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளையும் முதல்வர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்வேன். முதல்வர் அவர்களின் சீரிய வழிகாட்டுதலின்படி , முதற்கட்டமாக மேற்கண்ட 47 திருக்கோயில்களில் அடிப்படை வசதிகள் , குடமுழுக்குக்கு அனுமதிக்கப்பட்டு திருப்பணிகள் முடிவடையாத திருக்கோயில்கள் , பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் , தேவைப்படும் பணியாளர்கள், ஆகியவற்றை நிறைவேற்ற பெரு வரைவு திட்டம் தயார் செய்து அதனடிப்படையில் பணிகள் விரைந்து நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் .
இதேபோல் மற்ற முதுநிலை திருக்கோவில்களிலும் பணியாற்றும் அனைவரையும் அழைத்து அவர்களது குறைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் . இவ்வாறு அவர் கூறினார் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu