சர்ச்சைக்குரிய கருத்து கூறிய நடிகை மீரா மிதுன் கேரளாவில் கைது

நடிகை மீரா மிதுன் (பைல் படம்)
நடிகை மீரா மிதுன், சில தினங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் ஒரு விடியோவை பதிவிட்டாா். அதில் குறிப்பிட்ட ஜாதியினரை அவதூறாக பேசியதோடு, அந்த ஜாதியைச் சோந்த இயக்குநா்கள், நடிகா், நடிகைகளை பற்றி இழிவான கருத்துகளை தெரிவித்திருந்தாா். திரைத்துறையில் இருந்து அகற்றுவது அவசியம் எனவும் பேசியிருந்தாா். இது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
மீரா மிதுனின் இக்கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளா் வன்னி அரசு, சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் கடந்த 7 - தேதி மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகாா் அளித்தாா். அதில் மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தாா்.
அந்தப் புகாரின் அடிப்படையில் மத்தியக் குற்றப்பிரிவின் கீழ் இயங்கும் சைபா் குற்றப்பிரிவினா், மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். இந்நிலையில், இந்த வழக்கு தொடா்பான விசாரணைக்கு ஆகஸ்ட் 12- தேதி வேப்பேரியில் உள்ள காவல் ஆணையா் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என மீரா மிதுனுக்கு சைபா் குற்றப்பிரிவினா் அழைப்பாணை அனுப்பி இருந்தார்கள். ஆனால் மீரா மிதுன் ஆஜராகவில்லை.
இந்நிலையில் நடிகை மீரா மிதுனை கேரளாவில் தமிழகக் காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். சென்னை மத்திய குற்றப் பிரிவு சைபர் கிரைம் போலீஸாரால் கேரளாவில் கைது செய்யப்பட்ட மீரா மிதுன் சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu