இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 47 மீனவா்கள் சென்னை வந்தனர்

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட  47  மீனவா்கள் சென்னை வந்தனர்
X

சென்னை விமான நிலையத்தில் இருந்து தமிழக மீனவர்கள் வெளியே வந்தனர்.

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டு விடுதலையான 47 மீனவா்கள் விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தனர்.

ராமேஸ்வரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் இயந்திரப் படகுகளில் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனா். அப்போது டிசம்பா் 18ம் தேதி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சுற்றி வளைத்து பிடித்து எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்தனா்.ராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகப்பட்டிணம் மாவட்டங்களை சோ்ந்த 56 மீனவர்களை கைது செய்து படகுகள், பிடித்த மீன்கள், மீன்பிடி சாதனங்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனா்.

மீனவா்கள் விடுதலை கோரி தமிழக முதலமைச்சா் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தனா்.இதையடுத்து தமிழக அரசு மத்திய வெளியுறவு துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியது. மத்திய அரசும், தமிழக மீனவா்கள் விடுதலைக்காக நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில் கடந்த ஜனவரி 2ம் வாரத்தில் தமிழக மீனவா்கள் 56 பேரையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. 54 மீனவர்களும் இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டனர்.

தமிழக மீனவா்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்து இந்தியாவுக்கு அனுப்ப இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் நடவடிக்கை எடுத்துக் கொண்டு இருந்தது. இந்தநிலையில் தமிழக மீனவர்கள் பலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தது பரிசோதனையில் தெரியவந்தது. உடனடியாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்க முடியவில்லை. கொரோனா பாதிப்பிற்குள்ளான மீனவா்களுக்கு இலங்கையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கையில் உள்ள இந்திய தூதரகம், கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத ராமேஸ்வரம், புதுக்கோட்டை மீனவர்கள் கடந்த 10ந் தேதி வந்தனர். இந்த நிலையில் மீதமுள்ள 47 மீனவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தனா். மீனவா்களுக்கு பாஸ்போா்ட் இல்லாததால் இந்திய தூதரகம் எமா்ஜென்சி சா்டிபிகெட் வழங்கி அனுப்பி வைத்தது.

சென்னை விமான நிலையத்திற்கு வந்த 47 மீனவர்களை தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனா். ராமேஸ்வரம் மீனவர் அந்தோணி சிவியம் கூறுகையில், டிசம்பர் மாதம் 18ந் தேதி இலங்கை கடற்படையினர் படகுகளை இடித்து எல்லை தாண்டி மீன் பிடித்தாக கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜனவரி 25ந் தேதி விடுதலை செய்யப்பட்டதும் இந்திய தூதரக அதிகாரி எங்களை வெளியே எடுத்திருக்க வேண்டும். மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டோம். கொரோனா தொற்று இருப்பதாக கூறி தனிமைப்படுத்தி சிகிச்சை எதுவும் செய்யவில்லை. தூதரக அதிகாரிகள் எதுவும் செய்யவில்லை. மீனவர்கள் சாப்பிடாமல் உண்ணாவிரத போராட்டம் நடத்தினோம். அதன் பின்னர் தான் இந்திய தூதரக அதிகாரிகள் வந்தனர். எங்களை விடுவிக்க உதவிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். படகுகளை இழந்து வாழ்வாதாரம் இன்றி உள்ளோம். படகுகளை மீட்டு தர வேண்டும். இந்தியா இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டும் போது மீனவர்கள் மீதான தாக்குதல் பற்றி பேசி படகுகளை பெற்று தர வேண்டும். தமிழகத்தை 44 மீனவர்கள் சிறையில் உள்ளனர். இந்திய தூதரக அதிகாரிகள் உரிய உதவிகள் செய்யவில்லை என்றார்.


முன்னதாக சென்னை வந்து 4 மணி நேரம் ஆகியும் தங்களுக்கு குடிக்க தண்ணீர், தேனீர் வசதி கூட செய்யவில்லை என கூறி வேனில் ஏற மறுத்து விமான நிலையத்தில் தரையில் அமர்ந்தனர். பின்னர் மீன்வளத்துறை அதிகாரிகள் சமரசம் பேசி வேனில் ஏற்றி சொந்த ஊருக்கு அழைத்து சென்றனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself