விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு ரூ.3.98 கோடி: முதல்வர் ஸ்டாலின் வழங்கல்
பாராலிம்பிக் போட்டிகள், ஃபிடே உலக சதுரங்க ஆன்லைன் ஒலிம்பியாடு போட்டிகள் மற்றும் பல்வேறு சதுரங்க போட்டிகளில் பதக்கங்கள் மற்றும் பட்டங்கள் வென்ற தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.3.98 கோடி ரூபாய்க்கான காசோலைகளை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், பாராலிம்பிக் போட்டிகள், ஃபிடே உலக சதுரங்க ஆன்லைன் ஒலிம்பியாடு போட்டிகள் மற்றும் பல்வேறு சதுரங்க போட்டிகளில் பதக்கங்கள் மற்றும் பட்டங்களை வென்ற 15 தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டது.
ஜப்பான் தலைநகர், டோக்கியோவில் நடைபெற்ற மாற்றுத் திறனாளர்களுக்கான பாராலிம்பிக் 2020 போட்டிகளில் உயரம் தாண்டுதல் போட்டியில், T-63 பிரிவில், 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்ற டி.மாரியப்பனுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 2 கோடி ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.
2020-ஆம் ஆண்டு சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் (FIDE) மூலம் நடைபெற்ற ஃபிடே உலக சதுரங்க ஆன்லைன் ஒலிம்பியாடு போட்டியில், இந்திய அணியின் சார்பாக கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த், விஆர்.அரவிந்த் சிதம்பரம், ஆர். பிரக்ஞானந்தா மற்றும் வைஷாலி ஆகியோருக்கு தலா 20 இலட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 80 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள், அணியின் பயிற்சியாளர் ஸ்ரீநாத் நாராயணனுக்கு 12 இலட்சம் ரூபாய் என மொத்தம் 92 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டது.
2021- ஆம் ஆண்டு சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் மூலம் நடைபெற்ற ஃபிடே உலக சதுரங்க ஆன்லைன் ஒலிம்பியாடு போட்டியில், இந்திய அணியின் சார்பாக கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த், பா. அதிபன்,ஆர். பிரக்ஞானந்தா, வைஷாலி மற்றும் பா. சவிதா ஸ்ரீ ஆகியோருக்கு தலா 10 இலட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளும் மற்றும் ஆண்கள் பயிற்சியாளர் ஸ்ரீநாத் நாராயணன் அவர்களுக்கு 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மற்றும் பெண்கள் அணியின் பயிற்சியாளர் மோ. ஷ்யாம் சுந்தருக்கு 3 இலட்சம் ரூபாய் என மொத்தம் 57 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டது.
கடந்த 4.3.2019 முதல் 15.3.2019 வரை கஜகஸ்தான் நாட்டின் அஸ்தானா நகரில் நடைபெற்ற ஃபிடே உலக சதுரங்க குழு வாகையர் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதற்காக பா. அதிபன் அவர்களுக்கு 20 இலட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.
2019-ஆம் ஆண்டில் சதுரங்க விளையாட்டில் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற ப.இனியன், 2019- ஆம் ஆண்டில் சதுரங்க விளையாட்டில் மகளிர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற ஸ்ரீஜா சேஷாத்திரி, 2020-ஆம் ஆண்டில் சதுரங்க விளையாட்டில் மகளிர் கிராண்ட் மாஸ்டர் பட்டங்கள் வென்ற வர்ஷினி மற்றும் பி.வி. நந்திதா ஆகியோருக்கு தலா 5 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டது.
2020-ஆம் ஆண்டில் சதுரங்க விளையாட்டில் சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்ற வி.எஸ். ரத்தன்வேல் மற்றும் மு. பிரனேஷ், 2021- ஆம் ஆண்டில் சதுரங்க விளையாட்டில் மகளிர் சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்ற பா. சவிதா ஸ்ரீ ஆகியோருக்கு தலா 3 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் என மொத்தம் 3 கோடியே 98 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை 15 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ஊக்கத்தொகையாக தமிழக முதலமைச்சர் வழங்கினார்.
இந்த நிகழ்வின் போது, மாண்புமிகு சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அபூர்வ வர்மா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதன்மைச் செயலாளர் / உறுப்பினர் செயலர் ரமேஷ் சந்த் மீனா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu