போலி ரசீதுகள் மூலம் ரூ.240 கோடி அளவுக்கு ஜிஎஸ்டி மோசடி: சென்னையில் இருவர் கைது
சரக்குகளை அனுப்பாமல், ரூ.240 கோடி வரி விதிப்பு மதிப்பில் போலி ரசீதுகளை வழங்கி, ரூ.43 கோடி அளவுக்கு உள்ளீட்டு வரி (ITC) மோசடியில் ஈடுபட்ட இருவரை, சென்னையில் உள்ள ஜிஎஸ்டி புலனாய்வு பிரிவினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
சென்னையை சேர்ந்த உடைந்த உலோக பொருட்களை விநியோகிக்கும் வியாபாரி ஒருவர், சரக்குகளை அனுப்பாமல் ரூ.240 கோடி வரி மதிப்பீட்டுக்கு போலி ரசீதுகளை வழங்கியுள்ளார். இதன் மூலம் 8 போலி நிறுவனங்களுக்கு தகுதிற்ற முறையில் ரூ.43 கோடி உள்ளீட்டு வரியாக பெற்று மோசடி செய்யப்பட்டுள்ளது.
இதை கண்டுபிடித்த ஜிஎஸ்டி வருவாய் புலனாய்வு பிரிவினர், உடைந்த உலோக பொருட்களை விநியோகிக்கும் வியாபாரியின் பதிவு செய்யப்பட்ட அலுவலகங்கள் மற்றும் போலி நிறுவனங்களில், கடந்த மாதம் 31ம் தேதி, திடீர் சோதனை நடத்தினர். இதில் மோசடியில் ஈடுபட்டதற்கான போலி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. விசாரணையில், 8 போலி நிறுவனங்களின் செயல்பாட்டுக்கு தானே காரணம் என்பதை உலோக பொருட்கள் விநியோகிக்கும் வியாபாரி ஒப்புக் கொண்டார். இந்த ஜிஎஸ்டி வரி மோசடி மூலம் அரசுக்கு ரூ.43 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த மோடியில் ரூ.11.80 கோடி மதிப்பிலான உள்ளீட்டு வரி, உடைந்த பொருட்களை வாங்கும் டீலர் ஒருவரின் 2 நிறுவனங்களுக்கு தகுதியற்ற முறையில் சென்றுள்ளது.
ஆவண ஆதாரங்கள் அடிப்படையிலும், ஒப்புதல் வாக்குமூலம் அடிப்படையிலும், உடைந்த உலோக பொருட்களை விநியோகித்தவர், மற்றும் உடைந்த உலோக பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட டீலரையும் ஜிஎஸ்டி வருவாய் புலனாய்வு பிரிவினர் கைது செய்து சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம்-2ல் ஆஜர்படுத்தினர். இந்த மோசடி தொடர்பாக மேலும் விசாரணை நடக்கிறது.
ஜிஎஸ்டி உள்ளீட்டு வரி மோசடியில் ஈடுபடுபவர்கள், ஜிஎஸ்டி வரிஏய்ப்பு செய்பவர்கள் பற்றி நம்பகமான தகவல் அளிப்பவர்களை ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குனரகம் ஊக்குவிக்கிறது. தகவல் அளிப்பவர்களின் அடையாளம் பாதுகாக்கப்படும் என ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குனரகம் உறுதி அளிக்கிறது என அதன் முதன்மை கூடுதல் தலைமை இயக்குனர் மயாங் குமார் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu