அக்டோபர் இறுதிக்குள் அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி : ராதாகிருஷ்ணன்
தடுப்பூசி செலுத்துதல் (மாதிரி படம்)
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 2ம் கட்ட சிறப்பு மெகா தடுப்பூசி முகாமினை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன் பிறகு ராதாகிருஷ்ணன் நிருபர்களை சந்தித்து கூறுகையில்,
கடந்த முறை நடைபெற்ற மெகா தடுப்பு முகாமில் 28.91 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 16.37 லட்சம் தடுப்பூசிகள் தற்போது இருப்பு உள்ளது. இந்த நிலையில் இன்று நடைபெற்று வரும் இரண்டாவது சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் மூலம்15 லட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இம்மாதம் 1 ம் தேதி முதல் 18ம் தேதி வரை 92 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
18 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்துவதில் தவணை தவறியவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்க்கு இன்று முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. நோய்த்தொற்று கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் அதிகமாக காணப்பட்டு வருகிறது. மாநில அளவில் தமிழ்நாட்டில் தொற்றின் சதவீதம் 1.1 ஆக உள்ளது
தொற்று அதிகம் பரவும் பகுதிகளில் நோய் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வரும் 6 வாரம் தீவிரமான முறையில் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம் நோயை முழுமையாக தடுக்க முடியும். தமிழ்நாட்டில் 17,940 ஆக்சிஜன் , கான்சன்ரேட்டர் தயார் நிலையில் உள்ளது. உருமாறிய தொற்றை பொறுத்தவரையில் தமிழகத்தில் மரபியல் ரீதியாக 96 விழுக்காடு டெல்டா வைரஸ் தான் பரவுகிறது.
மிக விரைவில் 4 கோடி தடுப்பூசி இலக்கைத் தொட வாய்ப்பு உள்ளது. இரண்டாம் டோஸ் பொருத்தவரை சென்னை 32 விழுக்காடு தடுப்பு ஊசி செலுத்தி முதல் இடத்தில் உள்ளது.ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆர்வமாக மக்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். தடுப்பூசியின் சரியான கணக்கீடு மாலை தெரியவரும். இன்று 20,000 முகாம்கள் வரை அமைக்கபட்டுள்ளது. ஆக்டோபர் இறுதிக்குள் அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூயை செலுத்தி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மழை காலம் வருவதால் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளோம் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu