சென்னையில் தொடா்ந்து பெய்துவரும் பலத்த மழை : விமானங்கள் தாமதம்
பைல் படம்.
சென்னையில் தொடா்ந்து பெய்துவரும் பலத்த மழையால் சென்னை விமானநிலையத்திலிருந்து புறப்படும் 13 சா்வதேச விமானங்கள் உட்பட 59 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது.இதனால் சென்னை விமானநிலையத்திலிருந்து வெளிநாடுகள்,மற்றும் உள்நாட்டிற்குள் இயக்கப்படும் விமானங்கள் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன.
சென்னையிலிருந்து அபுதாபி,சாா்ஜா,துபாய்,கத்தாா்,ஓமன்,குவைத்,இலங்கை,லண்டன்,டாக்கா ஆகிய நாடுகளுக்கு செல்லும் 13 சா்வதேச விமானங்கள் 30 நிமிடங்களிலிருந்தது ஒரு மணி நேரம் வரையிலும், அதைப்போல் உள்நாட்டு விமானங்களான கொல்கத்தா,டில்லி,மும்பை,ஹைதராபாத்,பெங்களூா்,கொச்சி,கோழிக்கோடு,தூத்துக்குடி,மதுரை,திருச்சி, கோவை,அந்தமான், கோவா உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் 46 உள்நாட்டு விமானங்கள் 15 நிமிடங்களிலிருந்து 30 நிமிடங்கள் வரை தாமதமாகவும் புறப்பட்டு சென்றன. தொடா் மழை காரணமாக சென்னையிலிருந்து இன்று அதிகாலையிலிருந்து,பிற்பகல் 3 மணி வரை 15 மணி நேரத்தில் 59 விமானங்கள் தாமதம் ஆகியுள்ளன.
ஆனால் தொடா்ந்து மழை பெய்து கொண்டிருந்தாலும் வெளிநாடுகள்,வெளியூா்களிலிருந்து சென்னை விமானநிலையத்திற்கு வரும் விமானங்கள் அனைத்தும் தாமதமின்றி குறித்த நேரத்தில் வந்து தரையிறங்குகின்றன.
சென்னையிலிருந்து புறப்படும் விமானங்கள் மட்டும் தாமதமாவதற்கு காரணம்,விமானங்களில் பயணிகளின் உடமைகள் ஏற்றுவதில் காலதாமதம்,பலத்த மழையால் பயணிகளின் சென்னை விமானநிலையத்திற்கு வருகை தாமதம்,விமானங்களில் உணவு பொருட்கள் ஏற்றுவதில் தாமதம் போன்ற காரணங்களால் புறப்பாடு விமானங்கள் மட்டும் தாமதமாவதாக விமானநிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் சென்னை மாநகா்,வட சென்னை பகுதிகளோடு ஒப்பிடுகையில் மீனம்பாக்கம் பகுதிகளில் மழையின் அளவு குறைவு.எனவே சென்னை விமானநிலைய ஓடுபாதைகளில் மழைநீா் தேங்கி நிற்கவில்லை.இதனால் விமான சேவைகளில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu