மக்களை சந்திக்க பயப்படும் முதல்வர்: முன்னாள் அமைச்சர்: டி.ஜெயக்குமார்
மக்களை சந்திக்க பயப்படும் முதல்வர் என்றார் முன்னாள் அமைச்சர். டி.ஜெயக்குமார்.
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது: சட்டமன்ற தேர்தலின் போது பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றிய தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இப்போது மக்களை சந்திக்கவே அச்சப்படுகிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்து விடுவோம் என்று நீட்டி முழங்கியவர் இப்போது சட்டமன்றத்தைக் கூட்டி தீர்மானம் போட்டு நாடகமாடி வருகிறார்.
இந்த உண்மையை உணர்ந்துவிட்ட மாணவர் சமூகம் இன்றைய தினம் திமுக விற்கு எதிராக நிற்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப் போவதாக சொல்லி பெண்களின் வாக்குகளைப் பெற்றுவிட்டு இதுவரை அதுபற்றி மூச்சே விடாமல் இருப்பதால் விடியல் ஆட்சிக்கு முடிவுரை எழுத பெண்கள் தயாராகி விட்டார்கள்.
நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி வழங்கிவிட்டு இப்போது அதற்குள் ஆயிரம் விதிமுறைகள் உருவாக்கியிருப்பதும், அரசு ஊழியர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைப் பற்றி மூச்சே விடாமல் இருப்பதும் அனைத்து தரப்பினரையும் விடியல் ஆட்சிமீது உச்சக்கட்ட கோபத்தை உண்டாக்கியுள்ளது.
தமிழகத்தில் உண்டான கடும் மழையால் மக்கள் பாதிக்கப்பட்டபோதும் சரி, பொங்கல் சமயத்திலும் சரி மக்களுக்கு இந்த ஆட்சி உதவி புரியாமல் போனதுடன், இவர்கள் கொள்ளை அடிப்பதற்காகவே பொங்கல் பரிசு என்ற பெயரில் குப்பைக்கூளங்களை வழங்கியதைப் பார்த்து அனைத்து மக்களும் இன்று ஆவேசத்தில் உள்ளனர். இந்த உண்மையைத் தெரிந்து கொண்டிருக்கிற காரணத்தினால்தான் கொரோனாவின் மீது பழியைப்போட்டு கிராம சபைக்கூட்டங்களை ஸ்டாலின் அரசு தள்ளி வைத்தது என்பதை தமிழகமே அறிந்துள்ளது.
இந்த நிலையில்தான், நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்களிடம் நேரடியாக செல்ல அச்சப்பட்டுக் கொண்டு காணொளி வழியாக பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளார் ஸ்டாலின். மக்களை நேரில் சந்தித்தால் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் போய்விடும் என்ற அச்சம் முதல்வருக்கு உண்டாகி விட்டது, அதன் காரணமாகவே அவர் காணொளி வழியே தன் முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார்.
கடந்த தேர்தலில் அவர் வழங்கிய வாக்குறுதிகளே பொய்யாகி விட்டதால் இனி அவர் எந்த வாக்குறுதியை வழங்கினாலும் யாரும் நம்புவதற்கு தயாராக இல்லை. ஆனால், தனது ஆட்சி அதிகாரத்தை வைத்து நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தில்லுமுல்லுகள் செய்தாகிலும் இந்த விடியல் அரசு வெற்றிபெற திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. அதற்கு கழகம் ஒருபோதும் இடமளிக்காது என்றார் முன்னாள் அமைச்சர்.டி.ஜெயக்குமார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu