பிளாஸ்டிக் ஒழிப்பு மத்திய அரசு மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பிளாஸ்டிக் ஒழிப்பு மத்திய அரசு மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
X
பிளாஸ்டிக் ஒழிப்புக்கு எடுத்த நடவடிக்கை தொடர்பாக மத்திய அரசு மனு தாக்கல் செய்யும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்த தடை விதித்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, தள்ளுபடி செய்யப்பட்டது. உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி, மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு, நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வில், இன்று விசாரணைக்கு வந்தது.

சுற்றுச்சூழல் துறை முதன்மை செயலர் சுப்ரியா சாகு நேரில் ஆஜராகி, பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை விளக்கினார். அதுகுறித்த அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பான பிரசாரத்தை கண்காணிக்க, வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும், மூன்று மாதங்களில் கணிசமான முன்னேற்றத்தை காட்ட முடியும் என்றும், சுற்றுச்சூழல் முதன்மை செயலர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தலைமையில், பிப்ரவரி 24ல் நடந்த கூட்டத்துக்கு பின், பிளாஸ்டிக் ஒழிப்புக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, மத்தியசுற்றுச்சூழல் துறை மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை 2022 ஜனவரி 3ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags

Next Story