தலைமை செயலகம் இடம் மாற்றம் 'இப்போதைக்கு இல்லை': பாெதுப்பணித்துறை அறிவிப்பு
கட்டடத்தின் பெருமை மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காகவே, அரசு பல்நோக்கு மருத்துவமனையில் மீண்டும் பழைய கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது' என்று பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.
சென்னை ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில் கடந்த 2010ம் ஆண்டு திமுக ஆட்சியில் புதிய சட்டசபை வளாகம் மற்றும் தலைமை செயலகம் கட்டப்பட்டது. அதிமுக அரசு பொறுப்பேற்ற பின், கடந்த 2014ல் இது அரசு பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. தற்போது, இங்கு நோயாளிகளுக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன் அருகே மருத்துவக் கல்லுாரிக்கான கட்டடங்கள் கட்டப்பட்டு இயங்கி வருகின்றன.
தி.மு.க., அரசு மீண்டும் பொறுப்பேற்ற நிலையில், இந்த கட்டடத்தை மீண்டும் சட்டசபை மற்றும் தலைமை செயலகமாக மாற்ற திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், மருத்துவமனையின் முன்பக்கத்தில், புதிய தலைமை செயலகம் திறப்புக்கான கல்வெட்டு நேற்று முன்தினம் மீண்டும் பொருத்தப்பட்டது. இதனால் மருத்துவமனை, தலைமை செயலகமாக மாற்றப்படுமோ என நோயாளிகள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், பார்ப்பதற்கு பிரமாண்ட சிவலிங்கம் போன்று காணப்படும் இந்த கட்டடத்தில், சட்டசபை மட்டுமின்றி, முதல்வர், அமைச்சர்கள், துறை சார்ந்த அதிகாரிகளுக்கு ஒரே இடத்தில் அறைகள் அமைக்கப்பட்டன.
அரசு மருத்துவமனையாக மாற்றப்பட்டாலும், இந்த கட்டடத்தின் பெருமை மற்றும் வரலாறு மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காகவே, அகற்றப்பட்ட கல்வெட்டுகள் மீண்டும் பொருத்தப்பட்டுள்ளன. வேறு எந்த காரணமும் இப்போதைக்கு இல்லை இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu