சென்னையில் குவியும் மனுக்கள்: தலைமை செயலாளர் இறையன்பு உருக்கம்

சென்னையில் குவியும் மனுக்கள்: தலைமை செயலாளர் இறையன்பு உருக்கம்
X

தலைமை செயலாளர் இறையன்பு.

தலைமை செயலகத்தில் அதிகளவில் குவியும் மனுக்களால் மனம் கனக்கிறது என தலைமை செயலர் இறையன்பு கலெக்டர்களுக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக தலைமைச் செயலர் இறையன்பு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், அரசு நடவடிக்கைகளுக்குப் புத்துயிர் பாய்ச்ச வேண்டும் என்ற அடிப்படையில் உங்களை தமிழக அரசு நியமித்துள்ளது. இன்று, முதல்வர் தனிப்பிரிவுக்கு மனுக்கள் வந்து குவிந்த வண்ணம் இருப்பதை நான் காண்கிறேன்.

'உங்கள் தொகுதியில் முதல்வர்' என்ற திட்டத்தின் மூலம் பெற்ற அனைத்து மனுக்களின் மீது நூறே நாட்களில் எடுத்த நடவடிக்கை களையும், மக்களின் வெகுநாட்களாக தீர்க்காமல் இருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்ட அணுகுமுறைகளையும் கண்டு மக்கள் அளவு கடந்த நம்பிக்கையின் அடிப்படையில் இங்கு குவிகின்றனர்.

'உங்கள் தொகுதியில் முதல்வர்'என்பது சிறப்பு திட்டம். போர்க்கால அடிப்படையில் அலுவலர்கள் அந்த மனுக்களை அணுகியதால் அத்தனை மனுக்களுக்கும் விடிவு கிடைத்தது. பல்லாண்டுகள் தீர்க்கப்படாமல் தேங்கியிருந்த குறைகள் களையப்பட்டன.

அதேபோன்று அனைத்து விஷயங்களிலும் நாம் செயல்படுவது சாத்தியமில்லை. ஒரே நாளில் பத்தாயிரம் மனுக்கள் வந்து குவிகின்றன. இந்த மனுக்கள் ஏன் குவிகின்றன என்பதை நாம் சிந்திக்க வேண்டும். மாவட்ட, வட்ட, வட்டார அளவில் தீர்க்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை உரிய காலத்தில் செய்யாமல் இருப்பதால் பொறுத்துப் பொறுத்து பார்த்துவிட்டு அவர்கள் குக்கிராமங்களில் இருந்து தலைமை செயலகம் நோக்கி புறப்பட்டு விடுகின்றனர்.

கனவுகள் நிறைந்த கண்களோடும், கவலைகள் நிறைந்த இதயத்தோடும், அவர்கள் காத்துக் கிடப்பதை பார்க்கும்போது மனம் கனக்கிறது. 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்திலும் மனுக்களின் மீது நடவடிக்கைகளை முடுக்கிவிட்டவர்கள் நீங்கள்தான். கோட்டையில் இருந்து கூறியதும் பிறப்பித்த ஆணையை குக்கிராம அளவிலேயே ஏன் முடிக்காமல் விட்டோம் என்பது ஆய்வுக்குட்பட்ட செயலாகும். 3 மாதங்களாகப் பட்டா மாற்றம் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என எனக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியை தொடர்புடைய மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியதும், படபடவென நடைபெற்றது பட்டா மாற்றம். பட்டா பெற்றவர் படித்து பட்டம் பெற்றபோது கூட இவ்வளவு மகிழ்ந்திருக்க மாட்டார்.

மாவட்ட நிர்வாகம், மக்கள் பிரச்சினைகளை மாவட்ட அளவிலேயே துரிதமாக தீர்க்க முனைய வேண்டும். கனிவோடும், பணிவோடும் செயல்பட்டால் அவர்கள் தலைமைச் செயலகத்தின் கதவுகளைத் தட்ட வேண்டிய தேவை எழாது. தலைமைச் செயலருடைய கடிதத்தை படிக்கும் அதே ஆர்வத்துடன் தத்தளிக்கின்ற அபலையின் மனுவையும் படிப்பதில் நீங்களே முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

அதிக மனுக்களை தீர்த்து வைக்கும் ஆட்சியருக்கு கேடயங்கள் வழங்குவதை விட குறைவான மனுக்களை தலைமைச் செயலகம் எந்த மாவட்டத்தில் இருந்து பெறுகிறதோ, அந்த மாவட்டத்துக்கு அளிக்கின்ற நடைமுறையை கொண்டுவரும் அளவுக்கு உங்கள் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!