வெளிநாடுகளிலிருந்து சென்னைக்கு கடத்திய ரூ.3 லட்சம் மதிப்பு போதை பொருட்கள்
கடத்தி வரப்பட்ட போதைப்பொருட்கள்.
அமெரிக்கா,நெதா்லாந்து நாடுகளிலிருந்து கொரியா் பாா்சல்களில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புடைய போதை மாத்திரைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட கஞ்சாவை சென்னை விமானநிலையத்தில் சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனர்.
சென்னை விமானநிலையத்திற்கு சரக்கு விமானத்தில் வந்திருந்த பாா்சல்களை விமானநிலைய சுங்கத்துறையினா் ஆய்வு செய்தனா். அப்போது சென்னைக்கு வந்த ஒரு கொரியா் பாா்சல், ஆந்திரா மாநிலம் விஜயவாடாவுக்கு வந்திருந்த 2 கொரியா் பாா்சல்கள் மீது சுங்கத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த பாா்சல்களில் புத்தாண்டு பரிசு பொருள் உள்ளே இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது சந்தேகத்தை மேலும் அதிகரித்தது.
இதையடுத்து பாா்சல்களில் இருந்த செல்போன் எண்களை தொடா்பு கொண்டனா். அவைகள் உபயோகத்தில் இல்லை என்று வந்தது. அதேபோல 3 பாா்சல்களில் இருந்த முகவரிகளும் போலியானவை என்று தெரியவந்தது. இதையடுத்து பாா்சல்களை திறந்து பாா்த்து சோதித்தனா்.
நெதா்லாந்து நாட்டிலிருந்து சென்னை முகவரிக்கு வந்த பாா்சலில் 53 போதை மாத்திரைகள் இருந்தன. அதேபோல அமெரிக்காவிலிருந்து ஆந்திரா முகவரிக்கு வந்திருந்த 2 பாா்சல்களில் 815 கிராம் பதப்படுத்தப்பட்ட கஞ்சா போதைப் பொருள் இருந்ததை கண்டுப்பிடித்தனா். இதையடுத்து போதை மாத்திரைகள்,கஞ்சாவை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனா். அவைகளின் மதிப்பு ரூ.3 லட்சம். இதையடுத்து சென்னை விமானநிலைய சுங்கத்துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu