அண்ணா பல்கலை., பாடதிட்டங்கள் மாற்றியமைக்க நடவடிக்கை - அமைச்சர் பொன்முடி
சென்னை தலைமை செயலகத்தில், அண்ணா பல்கலைகழக புதிய துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ள வேல்ராஜ், தமிழ்நாடு முதலமைச்சரை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள வேல்ராஜ் பதவியேற்பிற்கு முன்பாக முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றதாகவும், அண்ணா பல்கலைக்கழகத்தை சர்வதேச அளவில் உயர்த்துவதோடு, கல்வி ஆற்றலையும் அதிகரிக்க வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக்கொண்டதாகவும் கூறினார்.
மேலும், Blended (கற்றல் கற்பித்தல்) முறையை புகுத்த வேண்டும் என்று கூறியுள்ளதாக தெரிவித்த அவர், பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்றும், தொழில்கல்வி மற்றும் சமூக சேவைக்கான மாணவர்களை உருவாக்கும் வகையில் பாடத்திட்டம் இருக்க வேண்டும் என யோசனைகள் வைத்து கலந்து பேசியுள்ளதாக தெரிவித்தார்.
அதேப்போல், ஆராய்ச்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளை சர்வதேச அளவில் உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளதாகவும், வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சிக்கு தேவையான மாணவர்களை உருவாக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் என துணை வேந்தர் உறுதியளித்துள்ளதாகவும் கூறினார்.
அண்ணா பல்கலைக்கழகத்தை பன்னாட்டு பல்கலைக்கழகமாக உயர்ந்த தரத்தில் புதிய துணைவேந்தர் உருவாக்குவார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும், புதிதாக பதிவியேற்க இருக்கும் துணை வேந்தர் வேல்ராஜ்க்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
அனைவரும் கலந்துபேசி ஒற்றுமையான சூழலை அண்ணா பல்கலைக்கழகத்தில் உருவாக்க வேண்டும் என்று அவரை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்
கல்லூரிகளின் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், கல்லூரிகள் திறப்பது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டு முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu