அரசு வேலைகள் வாங்கித்தருவதாக ரூ.1.5 கோடி மோசடி: 8 பேர் கைது

Tobacco In Tamil | Tobacco News
X

பைல் படம்.

அரசு வேலைகள் வாங்கித்தருவதாக ரூ.1.5 கோடி மோசடியில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழுவின் பெயர் மற்றும் லோகோவை பயன்படுத்தி மதுரை, கோயமுத்தூர், காஞ்சிபுரம் மற்றும் சேலம் போன்ற இடங்களில் ஆட்களை வேலைக்குத் தேர்வு செய்வதாக சென்னையில் உள்ள அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழுவின் தென் மண்டல அலுவலர் ஆர்.சுந்தரேசன், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவாலிடம் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி புலனாய்வுப் பிரிவில் வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில் புகாரிலுள்ள விபரம் உண்மையெனத் தெரியவந்ததுடன் மாநில அரசு வேலைகள் பெற்றுத்தர சுமார் ரூ.1.5 கோடியை நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களிடம் பெற்றது தெரியவந்தது.

இதையடுத்து நேற்று திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகில் போலியாக நேர்முகத்தேர்வுகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை அறிந்து தனிப்படை போலீசார் அங்கு சென்று திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சூர்யா, அருண்குமார், தர்மலிங்கம், தயாநிதி, ராஜேஷ், சக்கரவர்த்தி, பிரபு மற்றும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த யோகானந்தம் ஆகியோரை கைது செய்து விசாரணைக்கு பின் நீதிமன்ற காவலுக்கு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பொதுமக்கள் யாரும், இதுபோன்ற போலியான ஏமாற்றும் நபர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம். மேலும் வேலைக்காக முயற்சி செய்பவர்களிடம் அரசாங்கமோ அல்லது தனியார் நிறுவனங்களோ எவ்வித முறையிலும் பணத்தை பெற்றுக்கொண்டு, வேலை வழங்கும் திட்டம் கிடையாது.

வேலைக்காக முயற்சி செய்பவர்கள் முன்பின் தெரியாத நபர்களிடம், வங்கியின் மூலமாகவோ, ரொக்கமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ பண பரிமாற்றம் செய்ய வேண்டாம் என்றும், வேலைக்காக சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளை தொடர்புகொண்டு விண்ணப்பிக்ககூடிய வேலைக்கான சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிறப்பான முறையில் புலனாய்வு செய்து அவர்களை கைது செய்த தனிப்படையினரை சென்னை பெருநகர காவல் ஆணையர் வெகுவாகப் பாராட்டினார்.

Tags

Next Story