சென்னை ஐஐடிவளாக நாய்களுக்கு உணவு வழங்க கால்நடைதுறைக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றம்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் உணவின்றித் தவிக்கும் தெரு நாய்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவளிக்கக் கோரி, சிவா என்பவர் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், கால்நடைகளுக்கு உணவளிக்க, ஆளுநர் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளதாகவும், அதில் இருந்து, 823 கால்நடைகள், 102 குதிரைகள்,17 ஆயிரத்து 979 தெருநாய்களுக்கு உணவளிக்கப்பட்டுள்ளதாகவும், விலங்குகளுக்கு உணவளிக்கச் செல்வோருக்கு 123 அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், அரசு ஒதுக்கீடு செய்த 9.2 லட்சம் ரூபாயை இன்னும் விடுவிக்கவில்லை எனத் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், தெரு விலங்குகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விரைவில் விடுவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, ஐஐடி வளாகத்தில் உள்ள நாய்களின் நிலையை அறிந்து அவற்றுக்கும் உணவளிக்க வேண்டும் எனவும், அதற்கு ஐஐடி நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu