அதிமுக வேட்பாளர் பட்டியல் எப்போது ரிலீஸ்? ஜெயக்குமார் புது தகவல்

அதிமுக வேட்பாளர் பட்டியல் எப்போது ரிலீஸ்? ஜெயக்குமார் புது தகவல்
X

ஜெயக்குமார்

அதிமுக வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியிடப்படும் என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.

தமிழகத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. மறுபுறம் அதிமுக, ஆளும் திமுக கூட்டணி தரப்பில் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகள் குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், நேற்று ஆலோசனை நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்ததாவது:

கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவது மற்றும் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் பேசப்பட்டது. திமுகவின் 8 மாத ஆட்சியில், மக்கள் பெரும் அதிருப்திக்கு உள்ளாகி உள்ளனர். தேர்தல் வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிட்டு உள்ளனர். சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு உள்ளதால், மக்கள் இந்த தேர்தலில் எங்களுக்கு வெற்றியை தருவார்கள்.

தேர்தல் கூட்டணியை பொறுத்தவரை, எந்த கட்சியாக இருந்தாலும் எங்களுடன் இருந்தால் மட்டுமே லாபம். விலகி செல்லும் கட்சிக்குதான் நஷ்டம். திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் சங்கர் மீதான நடவடிக்கையாக, கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது போதாது. அவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் இது போன்ற செயல்கள் தொடரும்.

நவநீதகிருஷ்ணன் கட்சி பொறுப்பு நீக்கப்பட்டுள்ளார். அவர், அதிமுகவில் இருந்து கொண்டு திமுக கட்சி அலுவலகமாக உள்ள அறிவாலயத்திற்கு செல்வது நாகரீகமற்ற செயல். அங்கு கால் வைப்பதே அவமானம். அப்படி இருக்கும் பட்சத்தில் அவர் பேசியது ஏற்றுக் கொள்ள முடியாது. கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் எவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றார்.

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?