கரூர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு அதிமுக கண்டனம்
பைல் படம்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியும் கூட்டாக இன்று வெளியிட்ட அறிக்கை:
தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து அதன்மூலம் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்துள்ள ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தமிழக மக்களுக்கு தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணியில் கவனம் செலுத்தாமலும்,
தமிழக வளர்ச்சித் திட்டப் பணிகளில் கவனம் செலுத்தாமலும், எதிர்க்கட்சியினர் மீது பழிவாங்கும் நடவடிக்கையை மட்டுமே செய்து வருகிறது.இது அதிமுகவுக்கு பொதுமக்கள் மத்தியில் களங்கம் ஏற்படுத்த போலீசாரை முடுக்கிவிட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.
ஸ்டாலின் தலைமையிலான அமைச்சர்கள் பலர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ள நிலையில், பல குற்றச்சாட்டுகளுக்கு வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு, தற்போது பிணையில் இருந்து நீதிமன்றத்திலே வழக்கை எதிர்நோக்கியிருக்கும் திமுக அமைச்சர்கள், அதனை திசை திருப்புவதற்காக, வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறுவது கண்டனத்திற்குரியது.
அதிமுகவை அழித்து விடலாம், ஒழித்து விடலாம் என கனவு கண்டால் அது பகல் கனவாகவே முடியும் என்ற வரலாறு ஸ்டாலின் அவர்களுக்குத் தெரியும்.
காழ்ப்புணர்ச்சியோடு போலீசார் மூலம் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது காவல்துறையை ஏவி விட்டு அவரது இல்லத்தில் சோதனை என்ற பெயரில் அச்சுறுத்த நினைக்கும் அரசுக்கு எங்களுடைய கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அவர்களுக்கு கட்சி உறுதுணையாக இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்வதோடு, ஸ்டாலின் அரசினுடைய இந்த அராஜகத்தையும், அத்துமீறல்களையும், தொண்டர்களின் துணையோடு, இதனை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்வோம் என தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu