ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு நடிகர் சூர்யா ரூ.15 லட்சம் நிதியுதவி
2 டி தயாரிப்பு நிறுவனம் சார்பில் 5 லட்சம் ரூபாயும், சூர்யா தனிப்பட்ட முறையில் 10 லட்சம் ரூபாய் வைப்பு நிதியாக பார்வதியிடம் வழங்கப்பட்டது
காவல்துறையின் அராஜகத்தால் உயிரிழந்த ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு நடிகர் சூர்யா 15 லட்சம் ரூபாய் வைப்பு நிதிக்கான காசோலையை வழங்கினார்.
சென்னை தியாகராயநகரில் உள்ள நடிகர் சூர்யாவின் இல்லத்திற்கு பார்வதி தனது குடும்பத்தினருடன் வருகை தந்தார். அவருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன, ராஜாக்கண்ணு வழக்கில், ஆரம்பத்திலிருந்து போராடி வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கோவிந்தன் உள்ளிட்டோரும் வருகை தந்தனர்.
நடிகர் சூர்யா உடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் கே. பாலகிருஷ்ணன் கூறியதாவது: ஜெய்பீம் திரைப்படத்தை தயாரித்து நடித்திருக்கும் சூர்யாவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இயக்குனர் ஞானவேலும் இந்த திரைப்படத்தை திறம்பட இயக்கி உள்ளார்.அடித்தட்டு மக்கள் மீது அராஜகத்தையும், அக்கிரமத்தையும் காவல் துறையோ அல்லது ஆதிக்க சக்திகளோ நிகழ்த்தும் போது அதைத் தட்டிக் கேட்டு நீதி பெற முடியும் என்பதை உலகம் முழுவதும் ஜெய் பீம் படம் எடுத்து சென்றுள்ளது.
தற்போது வறுமையால் வாடும் பார்வதிக்கு பொருளாதார உதவி செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுகொண்டோம். அதனை ஏற்று தற்போது 15 லட்ச ரூபாய் வைப்பு நிதி வழங்கி அதற்கான காசோலையை நடிகர் சூர்யா வழங்கியுள்ளார். 2 டி தயாரிப்பு நிறுவனம் சார்பில் 5 லட்சம் ரூபாயும், சூர்யா தனிப்பட்ட முறையில் 10 லட்சம் ரூபாய் வைப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது. வைப்பு நிதியில் வரும் வட்டி பணத்தை பார்வதி மாதம் மாதம் எடுத்துக்கொள்ள வழி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு பிறகு அந்த தொகையை அவரது குடும்பத்தினர் பிரித்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜெய் பீம் திரைப்படத்தை தமிழக முதலமைச்சர் பாராட்டியது மட்டுமல்லாமல், இருளர் சமூக மக்களுக்கு பல்வேறு அறிவிப்புகளையும் வழங்கியுள்ளார், எனவே அவரை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாராட்டி உள்ளதாகவும் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும் ஜெய் பீம் படத்தில் முன்னாள் வன்னியர் சங்க தலைவர் குரு வின் பெயர் தவறாக பயன்படுத்தப் பட்டிருப்பதாக பாமகவினர் 5 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மேலும் அக்கட்சியின் நிர்வாகி ஒருவர் சூர்யாவை அடிப்பவர்களுக்கு 1 லட்சம் கொடுப்பதாக தெரிவித்திருந்தார். இதன் காரணமாக நடிகர் சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கொடுக்க பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu