ரௌடிகளுக்கு புரியும் மொழியில் சொல்லிக் கொடுப்போம்! சென்னை காவல் ஆணையர் அருண் ஐ.பி.எஸ் அதிரடி
சென்னை மாநகர காவல் ஆணையர் அருண்
1998 ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி அருண். இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பும், உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் காவல்துறை மேலாண்மை பிரிவில் பட்டய படிப்பும் படித்துள்ளார்.
ஐபிஎஸ் பயிற்சி முடித்த பிறகு நாங்குநேரி, தூத்துக்குடி ஆகிய உட்கோட்டங்களில் உதவி காவல் கண்காணிப்பாளராக (ஏஎஸ்பி) பணியாற்றினார். பின்னர் கரூர், கன்னியாகுமரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (எஸ்பி) பணியாற்றினார் அருண்.
சட்டம் ஒழுங்கிற்கு அருண் கொடுத்த முக்கியத்துவமும் குற்றங்களை குறைக்க அருண் எடுத்த நடவடிக்கைகளும் வெகுவாக பாரட்டப்பட்டது. பின்னர் சென்னைக்கு வந்த அருண், துணை ஆணையராக சென்னை அண்ணா நகர் மற்றும் பரங்கிமலை ஆகிய இடங்களில் பணிபுரிந்துள்ளார். மேலும் தமிழ்நாடு குற்ற புலனாய்வுத் துறையில் காவல் கண்காணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். 2012 ஆம் ஆண்டு காவல்துறை டிஐஜியாக பதவி உயர்வு பெற்று திருச்சி சரக காவல் துணைத் தலைவராக பணியாற்றினார் அருண்.
லாட்டரிக்கு வேட்டு: மேலும் சென்னை மாநகரில் போக்குவரத்து வடக்கு மண்டலம் மற்றும் சட்டம் - ஒழுங்கு தெற்கு மண்டலத்தின் இணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். 2016 ஆம் ஆண்டு காவல்துறை ஐஜியாக பதவி உயர்வு பெற்று திருச்சி மாநகர காவல் ஆணையராக பணியாற்றினார் அருண். தொடர்ந்து சென்னை பெருநகர காவல்துறை கூடுதல் ஆணையராகவும் பொறுப்பு வகித்தார்.
2021 ஆம் ஆண்டு மீண்டும் திருச்சி மாநகர காவல் ஆணையராக இரண்டாவது முறையாக பொறுப்பு வகித்தார். திருச்சியில் கொடி கட்டிப் பறந்த லாட்டரி விற்பனைக்கு எதிராக நடவடிக்கை எடுத்த அருண், லாட்டரி அதிபர் உள்ளிட்ட கேங்கை கைது செய்தது பாராட்டுகளைப் பெற்றார்.
சட்டம் ஒழுங்கு ஸ்பெஷலிஸ்ட்:
2022 ஆம் ஆண்டு கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று, தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் ஆவடி மாநகர காவல் ஆணையராகவும் பதவி வகித்தார் அருண். இதையடுத்து கடந்த ஆண்டு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக பொறுப்பேற்றார் அருண். தமிழ்நாடு முழுவதும் கிரைம்களை கவனித்தும் போலீசாரின் நடவடிக்கைகளை ஆய்வு செய்தும் சட்டம் ஒழுங்கை பராமரிக்க பல்வேறு நடவடிக்கைகளை அருண் ஐபிஎஸ் மேற்கொண்டு வந்தார். பல இடங்களில் நில பிரச்னையில் போலீசார் தலையிட்டு பஞ்சாயத்து செய்வதாக புகார்கள் வந்த நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத நிலம் தொடர்பான சிவில் விவகாரங்களில் போலீசார் தலையிட கூடாது என்று அதிரடி உத்தரவை பிறப்பித்தார் அருண்.
இந்நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையராக பணியாற்றி வந்த சந்தீப்ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டு, அவருக்குப் பதிலாக சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம், தலைநகரில் சட்டம் ஒழுங்கு பற்றிய கடும் விமர்சனங்களை எழுப்பிய நிலையில் சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு அருண் ஐபிஎஸ், சென்னை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். 110-வது சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்க உள்ளார்.
தலைநகர் சென்னையில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பணியாற்றிய அருண், புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளதால், அவரது அதிரடி நடவடிக்கைகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அருண் பொறுப்பேற்றதும், ரவுடிகளை ஒழிப்பதும், போலீசில் லஞ்சத்தை தடுப்பதும் முதல் பணி என கூறியிருப்பது அனைத்து தரப்பிலும் வரவேற்பினை பெற்றுள்ளது.
ரவுடிகளுக்கு எந்த மொழி புரியுமோ அந்த மொழியில் சொல்லிக்கொடுப்போம் என்று சென்னை காவல் ஆணையராக புதியதாக பொறுப்பேற்ற அருண் ஐ.பி.எஸ் கூறியிருக்கிறார் .
சென்னையில் இனி என்ன நடக்கப்போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu