குஜராத்தை போன்று தமிழ்நாட்டிலும் 10 கோடி தடுப்பூசி இலக்கை எட்டுவோம்
குஜராத்தை போன்று தமிழ்நாட்டிலும் 10 கோடி தடுப்பூசி இலக்கை எட்டுவோம். தேர்தல் நேரம் என்பதால் யாரும் கொரோனா பாதிப்புகளை குறைத்து காட்டவில்லை.. அதற்கான அவசியமும் இல்லை என்றார் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
சென்னை அரும்பாக்கத்தில் நம்ம கபே திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மற்றும் அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மோகன் , பிக்பாஸ் பிரபலம் நமீதா மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்ரமணியன் மேலும் பேசியதாவது, சென்னை அரும்பாக்கத்தில் திருநங்கைகள் மூலமாக நம்ம கபே என்னும் பிரபலமான உணவகம் திறக்கப்பட்டது எனவும், பல்வேறு வியாபார உத்திகள் மூலம் 20 வது கிளை துவங்கப்பட்டது. திமுக ஆட்சியில் கலைஞர் முதல் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் வரை திருநங்கைகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.
அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் கட்டமைப்புகள் மேம்படுத்துவதன் மூலம் முதல்வர் ஸ்டாலின் தீவிர நடவடிக்கை மூலமும், தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் குறைத்து வருகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருந்து தற்போது 15 ஆயிரம் அளவில் குறைந்துள்ளது.
முதல் தவணை தடுப்பூசி சதவீதம் 92 சதவீதத்தை நெருங்கியிருக்கிறது. இரண்டாம் தவணை தடுப்பூசி 72 சதவீதமாக உள்ளது. அகில இந்திய அளவில் 175 கோடி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை 10 கோடியை நெருங்க போகிறோம் என்றும், தற்போது 9.88 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரண்டாம் தவணை தடுப்பூசி போட வேண்டியவர்கள் 1 கோடி அளவில் இருக்கின்றனர். அவர்கள் தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும் எனவும், விரைவில் குஜராத்தை போன்று தமிழ்நாட்டிலும் 10 கோடி என்ற அளவில் தடுப்பூசி இலக்கை எட்டுவோம்.
தமிழகம் முழுவதும் 87 சதவீதம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உள்ளது. எனவே பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பது எளிதானது. வரும் 23 ஆம் தேதி சனிக்கிழமை 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இந்தியாவிலேயே 24 மணி நேரமும் தடுப்பூசி போடுவது தமிழ்நாட்டில் தான் எனவும், ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகள் என அனைத்திலும் தினந்தோறும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
தேர்தல் நேரம் என்பதால் யாரும் கொரோனா பாதிப்புகளை குறைத்து காட்டவில்லை. பாதிப்புகள் அவ்வப்போது எவ்வளவு இருக்கிறதோ அதை அதிகரித்தோ குறைத்தோ காட்ட வேண்டிய அவசியமில்லை. மாநில அரசு சார்பில் தடுப்பூசி தொடர்பாக மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதினார். தடுப்பூசி விகிதத்தில் 90 சதவீதம் அரசு மருத்துவமனைகளுக்கும்,10 சதவீதத்தை தனியார் மருத்துவமனைகள் பெற்று கொள்ளலாம் என்றார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu