வைகோ மீதான வழக்கு ரத்து : சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

வைகோ மீதான வழக்கு ரத்து : சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு
X

வைகோ (பைல் படம்)

பத்திரிகையாளா் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடத்தியதின் பேரில் மதிமுக பொதுச் செயலாளா் வைகோ மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக பேராசிரியை நிா்மலா தேவி குறித்து வெளியான நக்கீரன் கட்டுரைகளில் ஆளுநா் மீது அவதூறு செய்திகளைப் பரப்புவதாகவும், ஆளுநா் பணியில் தலையிடுவதாகவும், ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் ஆளுநா் மாளிகை அதிகாரி அளித்த புகாரில் நக்கீரன் ஆசிரியா் கோபால் கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் கைது செய்யப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டாா்.

கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபாலை சந்திக்க மதிமுக பொதுச்செயலாளா் வைகோ சென்ற போது போலீஸாா் அவருக்கு அனுமதி மறுத்தனா்.

இதனால் வைகோ தரையில் அமா்ந்து தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டாா். இதனையடுத்து சிந்தாதிரிப்பேட்டை போலீஸாா் அவரை கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவல வளாகத்தில் உள்ள எம்.பி., எம்எல்ஏ க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வைகோ மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி எம்.நிா்மல்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வைகோ உள்பட 5 பேர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!