கடற்படை தினத்தையொட்டி போர்க் கப்பல்களை பார்வையிட்ட பள்ளி மாணவர்கள்
கடற்படை தினத்தையொட்டி சென்னை துறைமுகத்தில் நின்றிருந்த போர்க் கப்பல்களை பார்வையிட்ட பள்ளி மாணவர்கள்
இந்திய கடற்படை தினத்தையொட்டி சென்னைத் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கடற்படை கப்பல்களை ஐநூறுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர்.
1971-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த போரின் போது, டிசம்பர் 4 ஆம் தேதி அதிகாலை பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்திற்குள் நுழைந்த இந்திய கடற்படையினர் அங்கிருந்த போர்கப்பல்களை தாக்கி அழித்தனர். இது 2-ம் உலகப் போருக்கு பின்னர் நடந்த மிகப் பெரிய கப்பற்படை தாக்குதல் ஆகும். 'ஆபரேஷன் ட்ரைடென்ட்' என்று அழைக்கப்பட்ட இந்த தாக்குதலில் 3 ஏவுகணை படகுகளான ஐ.என்.எஸ். நிப்பட், ஐ.என்.எஸ். நிர்காட், ஐ.என்.எஸ். வீர் ஆகிய கப்பல்கள் கராச்சி துறைமுகத்துக்குள் சென்று எண்ணெய் கிடங்குகளை துவம்சம் செய்தது. இந்திய கடற்படையின் இந்த சாதனையை அங்கீகரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4 ஆம் தேதி 'இந்திய கடற்படை தினம்' கொண்டாடப்படுகிறது. இந்நாளில் 1971-ல் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரில் கொல்லப்பட்டவர்களும் நினைவுகூரப்படுகின்றனர்.
இந்த ஆண்டும் அதேபோல் வரும் ஞாயிற்றுக்கிழமை கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழ்நாடு புதுச்சேரி மண்டல கடற்படை அலுவலகம் சார்பில் சென்னையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் சென்னையைச் சேர்ந்த நான்கு பள்ளிகளில் பயின்று வரும் 540 பள்ளி மாணவர்கள் சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கடற்படை கப்பல்களான பங்காரா, பாத்திமால், பாரட்டான், பித்ரா ஆகிய நான்கு கப்பல்களில் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.
அப்போது இந்திய கடற்படையின் பல்வேறு பணிகள் குறித்த அடிப்படை விசயங்களை மாணவர்களுக்கு கடற்படை அதிகாரிகள் விளக்கிக் கூறினர். மேலும் நாட்டின் பாதுகாப்பில் தங்களை எதிர்காலத்தில் இணைத்துக் கொள்ள ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என பாதுகாப்பு அமைச்சம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu