2010 முதல் 2019 ஆண்டு வரை செம்மொழி தமிழ் விருது பெற்றவர்கள் பட்டியல் வெளியீடு
பைல் படம்
2010ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை செம்மொழி தமிழ் விருதுக்கு தேர்வானவர்கள் 10 பேரின் பெயர் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: முத்தமிழறிஞர் கலைஞரின் பெரு முயற்சியால் இந்தியாவில் முதன்முறையாக தமிழ் மொழியானது 2004–ம் ஆண்டு செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. செம்மொழித் தமிழுக்கென தனித்தன்மையுடன் ஓர் நிறுவனத்தை தொடங்கப்பட வேண்டும் என்ற முத்தமிழறிஞரின் கனவினை நிறைவேற்ற, ஒன்றிய அரசினை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டதன் அடிப்படையில், 2006ல் இந்திய மொழிகளுக்கான நடுவண் நிறுவனத்தின் ஒரு அங்கமாக இந்நிறுவனம் அமைக்கப்பட்டது. பின்னர் 2008ம் ஆண்டில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் என தன்னாட்சி பெற்ற நிறுவனமாக சென்னையில் அமைக்கப்பட்டது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவர் முதலமைச்சர் ஆவார்.
ரூ.1 கோடி நிதியில் அறக்கட்டளை:செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசால் தோராயமாக 17 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்நிலத்தினை சமன் செய்ய ரூ.1.45 கோடி நிதி வழங்கப்பட்டது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முக்கியத்துவம் கருதி கலைஞர் தமது சொந்த நிதியிலிருந்து ரூ.1 கோடி நிதியினை வழங்கி கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழாய்வு அறக்கட்டளையை அந்நிறுவனத்தில் நிறுவினார். அவ்வறக்கட்டளையின் வாயிலாக செம்மொழித் தமிழாய்வுக்கு சிறந்த பங்களிப்பினை வழங்கிய அறிஞர் பெருமக்களுக்கு ஆண்டுதோறும் கலைஞர்.மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கப்படுகிறது. இவ்விருது இந்தியாவிலேயே உயரிய விருதாக ரூ.10 லட்சம் பரிசுத்தொகையுடன் பாராட்டுச்சான்றிதழும், கருணாநிதியின் உருவச்சிலையும் அடங்கியதாகும்.
தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், இலக்கியம், மொழியியல், படைப்பிலக்கியம், இலக்கியத் திறனாய்வு, மொழிபெயர்ப்பு, நுண்கலைகள் ஆகிய துறைகளில் செம்மொழித் தமிழாய்வுக்குச் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ள அறிஞருக்கு இவ்விருது வழங்கப்படும். அறக்கட்டளை துவங்கப்பட்ட பின் 2009ம் ஆண்டிற்கான முதல் விருது பின்லாந்து நாட்டு அறிஞர் பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலாவுக்கு 2010, ஜூன் 23 அன்று கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அன்றைய குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது.
10 விருதாளர்கள் : செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது 2010 முதல் 2019 வரையிலான பத்து ஆண்டுகளுக்கு வழங்கப்படாமல் இருந்தது. தற்போது முதலமைச்சரின் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றவுடன் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வளர்ச்சிக்கான முன்னெடுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. அவ்வகையில் நிறுவனத்தின் 8 வது ஆட்சிக்குழுக் கூட்டம் முதலமைச்சரின் தலைமையில் 30.8.2021 அன்று நடைபெற்றது.
முதலமைச்சரால் அமைக்கப் பெற்ற விருதுத் தேர்வுக்குழுவினரால் கீழ்க்காணும் 10 விருதாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்: 2010–ம் ஆண்டுக்கான விருதுக்கு பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் தெற்கு ஆசிய மண்டல படிப்புகள் துறையின் முன்னாள் மூத்த விரிவுரையாளரான வீ.எஸ்.ராஜம் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். 2011–ம் ஆண்டுக்கான விருதுக்கு சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொன். கோதண்டராமனும், 2012–ம் ஆண்டுக்கான விருதுக்கு தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.சுந்தரமூர்த்தியும், 2013–ம் ஆண்டுக்கான விருதுக்கு புதுச்சேரி பல்கலைக்கழக முன்னாள் பதிவாளரும், புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் இயக்குனருமான ப.மருதநாயகமும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
2014–ம் ஆண்டுக்கான விருதுக்கு சென்னை பல்கலைக்கழக திருக்குறள் ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவர் கு.மோகனராசுவும், 2015ம் ஆண்டுக்கான விருதுக்கு மாநிலக்கல்லூரி முன்னாள் தமிழ் பேராசிரியர் மறைமலை இலக்குவனாரும், 2016ம் ஆண்டுக்கான விருதுக்கு புதுச்சேரி பல்கலைக்கழக வரலாற்றுத்துறை முன்னாள் பேராசிரியர் கா.ராஜனும், 2017ம் ஆண்டுக்கான விருதுக்கு ஜெர்மனி கோலேக்னே பல்கலைக்கழகத்தின் இந்தியர்கள், தமிழ் ஆய்வுகள் நிறுவனத்தின் தலைவருமான உல்ரிக் நிக்லாசும், 2018ம் ஆண்டுக்கான விருதுக்கு சென்னை புதுக்கல்லூரி முன்னாள் தமிழ் பேராசிரியர் கவிஞர் ஈரோடு தமிழன்பனும், 2019ம் ஆண்டுக்கான விருதுக்கு நெல்லை பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி மற்றும் தஞ்சாவூர் கரந்தை புலவர் கல்லூரி ஆகியவற்றின் முன்னாள் முதல்வர் கு.சிவமணியும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு விரைவில் விருது வழங்கப்பட உள்ளது. 2020, 2021 மற்றும் 2022ம் ஆண்டுக்கான விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu