நில அபகரிப்புக்கு கடும் நடவடிக்கை தேவை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நில அபகரிப்புக்கு கடும் நடவடிக்கை தேவை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
X
நில அபகரிப்பு போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்-சென்னை உயர் நீதிமன்றம்.

நில அபகரிப்பு போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் பிரதிநிதிகளுக்கு எதிராக, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், கபிலக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சங்கர் என்பவர் தாக்கல் செய்த மனுவில் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிட்ட கலாராணி என்பவருக்கு எதிராக, தேர்தல் பணியாற்றினேன். தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், நில அபகரிப்பில் ஈடுபட்டனர். அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தனர். இது குறித்து, நான் கேள்வி எழுப்பினேன். என் வீட்டுக்கு வழங்கப்பட்ட தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மோட்டார் பயன்படுத்தி தண்ணீர் எடுப்பதாக கூறினர். தண்ணீர் இணைப்பு மீண்டும் வழங்கும்படி வட்டார வளர்ச்சி அதிகாரி உத்தரவிட்டார்.

எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு, ரூ.10 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி, 2014 நவம்பரில் மனு அனுப்பினேன். மனுவை பரிசீலிக்கும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த அதிரடி உத்தரவு : இரண்டு கோஷ்டிகளுக்கு இடையேயான அரசியல் விரோதத்தால், பஞ்சாயத்து தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு எதிராக, நில அபகரிப்பு குற்றச்சாட்டுகளை மனுதாரர் எழுப்பி இருப்பது தெரிகிறது.

சட்டவிரோத செயல்களில் மனுதாரரோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளோ ஈடுபட்டு இருந்தால், மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தி, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நில அபகரிப்பில், மக்கள் பிரதிநிதிகள் ஈடுபடுவதை கடுமையாக அணுக வேண்டும். இத்தகைய குற்றச்சாட்டுகள் அதிகாரிகளின் கவனத்துக்கு வரும்போது, தாமதம் செய்யாமல் விசாரணை நடத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்காக பணியாற்ற, பிரதிநிதிகளை தேர்வு செய்கின்றனர். பதவிக்கு வருபவர்கள் நேர்மை, அர்ப்பணிப்பு உணர்வில் கடமையாற்ற வேண்டும். இந்த வழக்கில், மனுதாரர் எழுப்பிய குற்றச்சாட்டுகளை, அதிகாரிகள் விசாரிக்கவில்லை.

அரசியல் செல்வாக்கு உடையவர்களுக்கு எதிராக, சாதாரண மக்களால் குரல் எழுப்ப முடியாது. பயந்து போய், அரசின் கவனத்துக்கு யாரும் எடுத்து வருவது இல்லை. அனாமதேய தகவல்கள் வந்தாலும், உண்மை அறிய, அதை விசாரிக்க வேண்டும். எனவே, நில அபகரிப்பு போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நில அபகரிப்பு செயல் ஆபத்தானது மட்டுமல்ல, ஜனநாயகத்துக்கு விடப்பட்ட பெரும் அச்சுறுத்தல். அதனால் தான், குற்றப் பின்னணி உடையவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என நீதிமன்றங்கள் கூறி வருகிறது. இழப்பீடு பெற மனுதாரருக்கு உரிமை இல்லை. அதிகாரிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தும் எண்ணத்தில், இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுதாரரின் இத்தகைய செயலை பாராட்ட முடியாது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்