காமராஜர் துறைமுகம் ரூ. 735 கோடி வருவாய் ஈட்டி சாதனை

காமராஜர் துறைமுகம் ரூ. 735 கோடி வருவாய் ஈட்டி சாதனை
X

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் துறைமுக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சுனில் பாலிவால் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

துறைமுகத்தின் இணைப்பு சாலைகள் உள்ளிட்டவைகளுக்காக ரூ.375 கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது

எண்ணூர் காமராஜர் துறைமுகம் நடப்பாண்டில் ஒட்டுமொத்தமாக ரூ.735 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது என துறைமுக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சுனில் பாலிவால் தெரிவித்தார்.

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் துறைமுக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சுனில் பாலிவால் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். மேலும் சுய உதவி குழுக்கள், அரசு பள்ளிகளுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை அப்போது அவர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் சுனில் பாலிவால் பேசியதாவது: மார்ச் 1999 இல் இந்திய துறைமுகங்கள் சட்டம், 1908 ஆம் கீழ் ஒரு முக்கிய துறைமுகமாக அறிவிக்கப்பட்டது. அக்டோபர் 1999 ல் நிறுவனங்கள் சட்டம் 1956 ன் கீழ் எண்ணூர் போர்ட் லிமிடெட் நிறுவப்பட்டது.தொடக்கத்தில் சென்னை துறைமுகத்திற்கு உதவியாக செயல்பட்டு வந்தது. இரண்டாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் , தமிழ்நாடு மின்வாரியத்தின் தேவைக்காக நிலக்கரி போக்குவரத்திற்கு பயன்பட்டது. பின்னாளில் தமிழ்நாடு அரசு மின் திட்டத்திற்காக துறைமுகத்தை விரிவுபடுத்தியது. எண்ணூர் துறைமுகம் சென்னைத் துறைமுகத்திற்கு வடக்கே 24 கிலோ மீட்டர் தொலைவில் கோரமண்டல் கரையில் உள்ளது. 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி முதல் இது காமராஜர் துறைமுகம் என்றழைக்கப்படுகின்றது. அரசுடைமையாக்கப்பட்ட முதல் பொதுத்துறை நிறுவனம் ஆகும் .

இதன் மீது 26,000 மில்லியன் ரூபாய்களை தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. இத்துறையின் பங்குகளில் 68 சதவிகிதம் நடுவண் அரசிடமும், மீதம் 32 சதவிகிதம் சென்னைத் துறைமுகமும் கொண்டுள்ளன. இது 86 தொழிலாளர்களைக் கொண்டுள்ளது . இது இந்தியாவின் பன்னிரெண்டாவது பெரிய துறைமுகம் ஆகும்.நாட்டின் பெருந்துறைமுகமாக உருவாக்கப்பட்ட எண்ணூர் காமராஜர் துறைமுகம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்காக ஆண்டுக்கு 12 மில்லியன் டன் நிலக்கரியை கையாண்டு வருகிறது. ஒட்டுமொத்தமாக ஆண்டுக்கு சுமார் 70 மில்லியன் டன் சரக்குகளை கையாளும் திறன் பெற்றுள்ளது.

துறைமுகத்தின் இணைப்பு சாலைகள் உள்ளிட்டவைகளுக்காக ரூ.375 கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. துறைமுகத்தின் வடக்கு பகுதியில் ரூ. 92 கோடியில் தடுப்பு சுவர் அமைக்கப்பட உள்ளது. பெட்ரோலியம், எரிவாயு சரக்குகளை கையாளுவதற்காக ரூ.921 கோடியில் புதிய கப்பல் தள கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

கார் ஏற்றுமதியில் காமராஜர் துறைமுகம் தொடர்ந்து முன்னிலை வைத்து வருகிறது அண்மையில் 300 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பதற்கான ரூ. 1.65 கோடியில் திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் 33 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. இதே கால அளவில் ஒட்டுமொத்தமாக ரூ. 735 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது முந்தைய கால அளவுடன் ஒப்பிடும் போது 23 சதவீதம் அதிகமாகும்.நடப்பாண்டில் ஒட்டுமொத்தமாக 45 மில்லியன் டன் சரக்குகளை கையாள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார் பாலிவால். நிகழ்ச்சியில் பொது மேலாளர்கள் சஞ்சய் குமார் குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது