இரும்பு கழிவுகளை கையாள்வதில் சென்னை துறைமுகம் புதிய சாதனை
பைல் படம்
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 11,486 மெட்ரிக் டன் இரும்பு கழிவுகளை ஒரே நாளில் கையாண்டு சென்னை துறைமுகம் புதிய சாதனையை எட்டியுள்ளது.
இதுகுறித்து சென்னை துறைமுக போக்குவரத்து துறை தலைவர் கிருபானந்தசாமி கூறியது: உள்நாட்டு கட்டுமானத்துறையில் இரும்பு கம்பிகள் உள்ளிட்டவைகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் இந்தியாவில் இயங்கி வரும் இரும்பு உருக்காலைகள் நேரடியாக இரும்பு கழிவுகளை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. மேலும் இறக்குமதிக்கான சுங்க வரியில் பெருமளவு சலுகைகளும் அளிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நடப்பு நிதி ஆண்டில் சென்னை துறைமுகத்தில் மட்டும் இதுவரை சுமார் 13 லட்சம் டன் இரும்பு கழிவுகள் 35 கப்பல்கள் மூலம் இறக்குமதியாகி உள்ளன. நடப்பு நிதியாண்டிற்குள் மேலும் 15 கப்பல்களில் சுமார் 6 லட்சம் டன் இரும்பு கழிவுகள் இறக்குமதியாக உள்ளன. 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இரும்பு கழிவுகளை வெளிநாடுகளில் இருந்து தொடர்ந்து இறக்குமதி செய்து வருகின்றன.
இரும்புக் கழிவுகள் பெரும்பாபானவை அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இறக்குமதியாகும் இரும்புக் கழிவுகளை இருப்பு வைப்பதற்காக சென்னை துறைமுக நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. சென்னை துறைமுகத்திலிருந்து பாண்டிச்சேரி, கும்மிடிப்பூண்டி, கோவை,ஆந்திர பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளுக்கு சரக்கு ரயில்கள், லாரிகள் மூலம் இரும்பு கழிவுகள் எடுத்துச் செல்லப்படுகின்றன.
கையாள்வதில் புதிய சாதனை: இந்நிலையில் கடந்த சனிக்கிழமை டிச. 31ஆம் தேதி சென்னை துறைமுகத்திற்கு வந்திருந்த எம். வி. பேன் ஆம்பர் என்ற கப்பலிலிருந்து 11,486 மெட்ரிக் டன் இரும்பு கழிவுகளை ஒரே நாளில் இறக்குமதி செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதற்கு முன்பு முன்பு ஜன. 13, 2017 -ல் எம்.வி. குளோரியஸ் சன்ஷைன் என்ற கப்பலில் இருந்து 9,300 மெட்ரிக் டன் இரும்பு கழிவுகளை கையாண்டது என்ற சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
துறைமுக தலைவர் பாராட்டு: இப்புதிய சாதனையை எட்டுவதற்கு உறுதுணையாக இருந்த துறைமுக அதிகாரிகள், கப்பல் முகமை நிறுவனமான பென் லைன் ஏஜென்சிஸ், சுங்கத் துறை முகமை நிறுவனமான கேலக்ஸி கமெர்சியல், சரக்குகளை ஏற்றி, இறக்கும் நிறுவனமான பி.எம்.பி. ஸ்டீல்ஸ் நிறுவனத்தை சார்ந்த முக்கியஅதிகாரிகளை சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகங்களின் தலைவர் சுனில் பாலிவால் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார் என்றார் கிருபானந்தசாமி.
சென்னை துறைமுகம்...
தென்னிந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் உள்ள சென்னைத் துறைமுகம், நூறாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட ஒரு செயற்கைத் துறைமுகம் ஆகும். இது கோரமண்டல் கரை எனப்படும் கிழக்குக் கரையோரப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தொடக்கப் பகுதிகள், 1861 -ஆம் ஆண்டில் கட்டப்படவை ஆகும். ஆனால் 1868 ஆம் ஆண்டிலும், 1872 -ஆம் ஆண்டிலும் ஏற்பட்ட சூறாவளியினால் இது பயன்படுத்தப்பட முடியாததாயிற்று.
1876 -ஆம் ஆண்டில் "ட" வடிவத் தடைச் சுவருக்கான கட்டுமான வேலைகள் தொடங்கப்பட்டன. ஆனால் 1881 -ஆம் ஆண்டில் ஏற்பட்ட சூறாவளி, பெரும்பாலும் நிறைவடைந்த நிலையில் இருந்த துறைமுகத்தை அடித்துச் சென்று விட்டது. இத் துறைமுகம் புதிதாக அமைக்கத்தொடங்கிய 1881 -ஆம் ஆண்டையே தொடக்கமாகக் கொண்டு 2007 -ஆம் ஆண்டில் சென்னைத் துறை முகத்தின் 125 -ஆவது ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டது.
சென்னைத்துறைமுகம் இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகங்களுள் ஒன்றாகும். அண்மைக் காலங்களில் முக்கியமான கொள்கலன் துறைமுகமாக மாறியுள்ள இது முன்னர் போக்குவரத்துக்கு உரிய முக்கிய துறைமுகமாகவே விளங்கியது. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, சிறப்பாக உற்பத்தித் தொழில் வளர்ச்சிக்கான முக்கிய காரணிகளுள் இதுவும் ஒன்று. தற்போது, சிங்கப்பூர், ஹாங்காங், ஷங்காய், ஷென்ஸென் ஆகிய துறைமுகங்களுடன் ஒப்பிடும்போது இது மிகவும் சிறிய துறைமுகமாக இருப்பினும் வரும் ஆண்டுகளில் இது விரிவாக்கப்பட உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu