சென்னை துறைமுக வளர்ச்சி திட்டங்கள்: கப்பல் போக்குவரத்து துறை செயலாளர் ஆய்வு..
Chennai Thuraimugam
Chennai Thuraimugam-சென்னை துறைமுகத்தின் முக்கிய வளர்ச்சி திட்டங்கள் குறித்து கப்பல் போக்குவரத்து துறை செயலாளர் டாக்டர் சஞ்சீவ் ரஞ்சன் ஆய்வு மேற்கொண்டார்.
இந்திய சுதந்திர நூற்றாண்டு தினம் கொண்டாடவிருக்கும் 2047 ஆம் ஆண்டுக்குள் சென்னை துறைமுகத்தில் நிறைவேற்றி முடிக்கப்பட வேண்டிய முக்கிய வளர்ச்சி திட்டங்கள், பிரதமரின் வேக சக்தி , மின் ஆளுமை குறித்து மத்திய துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை செயலாளர் டாக்டர் சஞ்சீவ் ரஞ்சன் திங்கள்கிழமை சென்னையில் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
இது குறித்து சென்னை துறைமுக நிர்வாகம் வெளியிட்ட தகவல்: சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக மத்திய துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சக செயலாளர் டாக்டர் சஞ்சீவ் ரஞ்சன் இரண்டு நாள் பயணமாக சென்னை வந்தார்.
திங்கள்கிழமை சென்னை துறைமுகத்திற்கு வந்த அவரை துறைமுக தலைவர் சுனில் பாலிவால் வரவேற்றார்.பின்னர் துறைமுகத்தின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து சஞ்சீவி ரஞ்சன் நேரில் பார்வையிட்டார். அப்போது பசுமை திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் மரக்கன்றுகளை சஞ்சீவி ரஞ்சன் மற்றும் சுனில் பாலிவால் ஆகியோர் நடவு செய்தனர்.
இதனையடுத்து தூத்துக்குடி வ. உ .சி.துறைமுக தலைவர் டி.கே. ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற பிரதமரின் வேக சக்தி திட்டம், புதிய தளவாடக் கட்டமைப்பு கொள்கை, தொழில் செய்வதில் எளிமையான நடைமுறைகள், மின் ஆளுமை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளிலான கருத்தரங்கத்தில் சஞ்சீவி ரஞ்சன் பங்கேற்றார் .இதில் சென்னை துறைமுகம் தலைவர் சுனில் பாலிவால், தென்னக ரயில்வே முதன்மை தலைமை மேலாளர் (செயல்பாடுகள்) நீனு இட்டையரா, சுங்கத்துறை ஆணையர் ஆர் சீனிவாச நாயக், இந்திய தொழில் கூட்டமைப்பு பிரதிநிதி எஸ். நரசிம்மன் , துறைமுக முக்கிய அதிகாரிகள் மற்றும் துறைமுக உபயோகிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
குறிப்பாக சென்னை துறைமுகம்- மதுரவாயல் உயர்மட்ட இரண்டடுக்கு மேம்பால திட்டப் பணிகள், ஸ்ரீபெரும்புதூர், மப்பேடு பல்துறை கட்டமைப்பு தளவாட பூங்கா, ரயில் பாதைகளை மேம்படுத்தி கூடுதல் சரக்கு ரயில்களை இயக்குதல், துறைமுக உபயோகிப்பாளர்கள் சரக்குகளை கையாள்வதில் எளிமையான நடைமுறைகளை அமல்படுத்துதல், இதற்கு ஏற்றவாறு மின்ஆளுவை திட்டங்களை அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுத்துதல், முக்கிய வளர்ச்சி திட்டங்களை விரைவாக செயல்படுத்துவதற்கு அனைத்து துறைகளும் அனுமதி அளிப்பதில் இருந்து வரும் இடர்பாடுகளை விரைந்து நீக்குவது.
மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கு மாநில அரசின் விரிவான ஒத்துழைப்பை முழுமையாக அளிப்பது, புதிய கட்டமைப்பு தளவாட கொள்கைகளில் உள்ள நன்மைகள் குறித்து வெளிப்படையாக அறிந்து கொள்ளுதல், சுங்கத்துறையின் ஆவண பரிசோதனைகளுக்குப் பிறகு துறைமுகத்திலிருந்து வெளியேயும் வெளியே இருந்து துறவியதற்கு உள்ளேயும் காலதாமதமின்றி சரக்குகளை எடுத்துச் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கருத்துக்கள் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இவைகளை விரிவாக கேட்டறிந்த மத்திய செயலர் டாக்டர் சஞ்சீவி ரஞ்சன் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் உலக அளவில் முன்னணியில் உள்ள தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்களை விரைவாக செயல்படுத்திட அனைத்து துறையினருக்கும் அறிவுறுத்தினார் மேலும் சென்னை துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களில் விரைவாக செயல்பட்டு வரும் துறைமுக தலைவர் மற்றும் அதிகாரிகளை டாக்டர் சஞ்சீவ் ரஞ்சன் வெகுவாக பாராட்டினார். செவ்வாய்க்கிழமை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் டாக்டர் சஞ்சீவி ரஞ்சன் ஆய்வு மேற்கொள்ள உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu