தமிழகம் முழுவதும் பேனர் வைக்க தடை: விதிகளை வகுக்க உ.யர்நீதிமன்றம் வலியுறுத்தல்
பைல் படம்
தமிழகம் முழுவதும் பேனர்கள் வைப்பதை முழுமையாக தடை செய்யும் வகையில் உரிய விதிகளை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரத்தில் முன்னாள் எம்.எல்.ஏ இல்லத் திருமணத்திற்கு வந்த அமைச்சர் பொன்முடியை வரவேற்று பேனர் வைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 12 வயது சிறுவன் தினேஷ் மின்சாரம் தாக்கி பலியானார். இந்த சம்பவத்தை குறிப்பிட்டு, விழுப்புரத்தில் சட்ட விரோதமாக பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி விழுப்புரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் ஐகோர்ட்டில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பேனர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கொடிக்கம்பங்கள், பேனர்கள் வைக்க கூடாது என ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை மீறி இந்த கொடிக்கம்பங்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. மேலும், இது தொடர்பான ஒரு வழக்கில் தி.மு.க. தரப்பில் பேனர்கள் வைக்கப்படமாட்டாது என்று உத்தரவாதம் அளித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.
பேனர்கள் வைக்க முழுமையாக தடை: இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், பேனர்கள் வைப்பதற்கு ஒப்பந்தம் பெற்றிருந்த காண்ட்ராக்டர்தான் 12வயது சிறுவனை பணியில் அமர்த்தி இருக்கிறார். இந்த சம்பவத்தை அடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாகவும், விழுப்புரம் முதன்மை நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் பலியான சிறுவனின் குடும்பத்தினருக்கு தற்காலிகமாக ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும் கடந்த 2019ம் ஆண்டே முதல்வர் முக.ஸ்டாலின் பேனர்கள் வைக்கக்கூடிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமாட்டேன் எனக் கூறிய உள்ளதாகவும், கட்சி தொண்டர்களை பேனர்கள் வைக்க கூடாது என்று முதல்வர் அறிவுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.இதையடுத்து அனுமதியின்றி பேனர்கள் வைப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று குறிப்பிட்ட தலைமை நீதிபதி மாவட்டங்களுக்கும், தாலுகா நீதிமன்றங்களுக்கும் தான் சென்ற போது ஏராளமான பேனர்களை பார்த்ததாகவும் தெரிவித்தார்.
பின்னர் பேனர்கள் வைப்பது முழுமையாக தடை செய்யும் வகையில் உரிய விதிகளை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கு தொடர்பாக தமிழக அரசு, திமுக ஆறு வாரங்களில் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu