உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் கீழ் இதுவரை 1,21,720 மனுக்கள் மீது நடவடிக்கை

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் கீழ் இதுவரை 1,21,720 மனுக்கள் மீது நடவடிக்கை
X

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பைல் படம்

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் கீழ் இதுவரை 1,21,720 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, 50,643 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் தேர்தல் பரப்புரையின் போது பெறப்பட்ட மனுக்கள் மீது துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்ட மனுக்களிலிருந்து சில பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு, கடந்த 18-5-2021 அன்று 549 நபர்களுக்கும், 3-6-2021 அன்று 3,213 நபர்களுக்கு மற்றும் 11-6-2021 அன்று 1,100 நபர்களுக்கும் நலத் திட்ட உதவிகளுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

இதுவரை 1,21,720 மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவற்றில், 50,643 மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன. ஏற்கப்பட்டுள்ள 50,643 கோரிக்கைகளில், வருவாய்த் துறையின் கீழ் தனிநபர் கோரிக்கைகளான பட்டா, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியங்கள், இதர நலத் திட்ட உதவிகள் 18,744 ஆகும். மேலும், ஊரக வளர்ச்சித் துறையின்கீழ் 7,311 நபர்களுக்கு வீடு கட்ட வழங்கப்பட்ட உதவித் தொகைகளும், அடிப்படைக் கட்டமைப்புகளுக்கான சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பிலான 5,250 பணியாணைகளும் இவற்றில் அடங்கும்.

நகரப் பகுதிகளில் அடிப்படை வசதி கோரி பெறப்பட்ட 1,767 மனுக்கள் பல்வேறு நகராட்சிகள்மூலம் ஏற்கப்பட்டுள்ளன. புதிய குடும்ப அட்டை மற்றும் கூட்டுறவு உணவுப் பொருள் துறை சம்பந்தப்பட்ட 2,504 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

மின்பகிர்மானக் கழகம் தொடர்பான 1,334 கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. சமூக நலத் துறை தொடர்பான 933 மனுக்களுக்கான கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன. இதுதவிர, மற்ற துறைகள் சார்ந்த 12,800 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளன.

எஞ்சியுள்ள மனுக்களில், 36,072 மனுக்கள் மனுதாரரின் முகவரி இல்லாமலும், மனுதாரரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள இயலாமலும், கோரிக்கைகளில் தெளிவு இல்லாமலும் உள்ளதால், இவற்றை தற்போது நிறைவேற்றிட இயலாத நிலை உள்ளது. எனினும், அவர்களைத் தொடர்பு கொண்டு, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், 35,005 மனுக்கள் தற்போதுள்ள அரசு விதிகளின்கீழ் நிறைவேற்றிட இயலாத நிலை இருப்பதால், அவர்களுக்கான மாற்றுத் தீர்வுகள் அளிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுதவிர, வேலைவாய்ப்பு கோரி பெறப்பட்ட 66,264 மனுக்கள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவ்வாறு பெறப்பட்ட மனுக்களில் சம்பந்தப்பட்ட மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் 47,611 மனுதாரர்களை தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை பெற்றுக் கொண்டனர். அதனடிப்படையில், மனுதாரர்களின் விருப்பத்திற்கேற்ப வேலைவாய்ப்பு உதவித் தொகை கோரிய 271 நபர்களுக்கு உதவித் தொகை வழங்கவும், அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு கோரும் 5,082 மனுதாரர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் வழிகாட்டி மையம் (District Employment and Career Guidance Centre) மூலம் போட்டித் தேர்வுகளுக்கான இணையதள வகுப்புகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, தற்போது வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

தனியார் வேலைவாய்ப்பு கோரி பெறப்பட்ட மனுக்களில் 2,545 மனுக்களில், மனுதாரர்களின் விவரங்கள் www.tnprivatejobs.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இவர்களுக்கான இணையதள வேலைவாய்ப்பு முகாம் (Online Job Mela) கடந்த 21-6-2021 அன்று நடத்தப்பட்டது. இதில்184 நபர்களுக்கு உடனடியாக தனியார் நிறுவன வேலைவாய்ப்பில் தேர்வு செய்யப்பட்டனர்.

அதன்படி, முழுமையாக தீர்வு காணப்பட்ட 50,643 மனுதாரர்களில் 11 மனுதாரர்களை, முதலமைச்சர் நேரில் அழைத்து இன்று உரிய ஆணைகளை வழங்கினார்கள்.

இந்நிகழ்வில், தலைமைச் செயலாளர் இறையன்பு, , "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" துறையின் சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு