செல்போனில் மிஸ்டுகால் கொடுத்தால் மொட்டையடிக்க இலவச டோக்கன்: அமைச்சர்
அமைச்சர் பி.கே.சேகர்பாபு.
திருத்தணி முருகன் கோயிலில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று காலை ஆய்வு செய்தார். அப்போது தலைவர்கள் படங்களை அகற்ற உத்தரவிட்டார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, திருத்தணி கோயிலில் கடந்த 10 வருடங்களாக ஓடாமல் உள்ள தங்கத் தேர், வெள்ளி தேர் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தேர்களில் விரைவில் முருகன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். மொட்டையடிக்கும் தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் 5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
பெண்கள், ஆண்களுக்கு தனித்தனியாக குளியல் அறை ஏற்பாடு செய்யப்படும். பக்தர்கள் குளிப்பதற்கு வெந்நீர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ராஜகோபுரம் கட்டும் பணிகள் நடைபெற்றுவருவதால் 360 படிக்கட்டுக்கள்தான் உள்ளது. இனிமேல் 365 படிக்கட்டுக்கள் அமைக்கப்படும்.
கோயில்களில் காலை உணவாக சாப்பாட்டுக்கு பதிலாக இட்லி, பொங்கல் வழங்கப்படும். மலைக்கோயில் பஸ் ஸ்டாப்பில் இருக்கை உள்பட அனைத்து வசதிகளும் விரைவில் செய்யப்படும். முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, வனத்துறையிடம் அனுமதி பெற்று மலைக் கோயிலுக்கு மேலும் பாதைகள் அமைக்கப்படும்.அறநிலையத்துறையும் பிஎஸ்என்எல் நிர்வாகம் இணைந்து பக்தர்கள் மொட்டையடிக்க புதிய திட்டம் உருவாக்கி உள்ளது.
இதன்படி மொட்டையடிக்கும் இடத்தில் மின்னணு இயந்திரம் வைக்கப்பட்டிருக்கும். இதன் அருகே சென்று யாருக்கு மொட்டையடிக்க வேண்டுமோ அவரது முகத்தை ஸ்கேன் செய்துவிட்டு அங்கு புதிதாக கொடுக்கப்பட்டுள்ள 8939971540 எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கவேண்டும். இது உடனடியாக ஸ்கேன் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நபரின் புகைப்படத்துடன் டோக்கன் அனுப்பிவைக்கப்படும். அந்த டோக்கனை காண்பித்து பக்தர்கள் இலவசமாக மொட்டை அடித்துக்கொள்ளலாம். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
இந்த ஆய்வின்போது ஆணையர் குமரகுருபரன், திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரன், மாவட்ட பொறுப்பாளர் பூபதி, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மு.நாகன், வக்கீல் கிஷோர்ரெட்டி, நகர பொறுப்பாளர்கள் வினோத்குமார், கணேசன், சாமிராஜ், பி.எஸ்.சங்கர் உள்பட பலர் சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu