சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து
கொரோனா வைரஸ் இரண்டாம் அலையின் கடுமையான தாக்கத்தால்,சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இன்று போதிய பயணிகள் இல்லாமல் 42 விமானங்கள் ரத்து. மிகவும் மோசமான தாக்குதலுக்குள்ளாகிய சென்னைக்கு வருவதற்கு விமான பயணிகள் அச்சம்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மாநகரம் அதை சுற்றியுள்ள புறநகா் பகுதிகளான செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சீபுரம் மாவட்டங்களில் தினமும் கட்டுக்கடங்காமல் கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளாகும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.
அதைப்போல் விமான பயணிகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சென்னை உள்நாட்டு விமான பயணிகளுக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை சான்றிதழ், வெளிமாநில பயணிகளுக்கு கட்டாய இ பாஸ் முறை போன்றவைகளும் அமுல்படுத்தப்பட்டுள்ளன. இதைப்போன்ற கடுமையான கட்டுப்பாடுகள், அதோடு சென்னை மற்றும் புறநகரில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் பீதியால் சென்னைக்கு வரும் விமான பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.
முழு ஊரடங்கு தினமான கடந்த ஞாயிறு கூட சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் பயணிகள் வருகை 4 ஆயிரமாகவும், சென்னையிலிருந்து வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை 5 ஆயிரமாகவும் மொத்தம் 9 ஆயிரமாக இருந்தது. ஆனால் இன்று சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் வருகை பயணிகள் 3 ஆயிரமாகவும், புறப்பாடு பயணிகள் 4 ஆயிரமாகவும் மொத்தம் 7 ஆயிரமாக குறைந்துள்ளது.
அதோடு சென்னை விமானநிலையத்தில் இன்று போதிய பயணிகள் இல்லாமல் மும்பை, டெல்லி, ஹைதராபாத், அகமதாபாத், கொச்சி, இந்தூா், அந்தமான், புவனேஸ்வா், மதுரை உள்ளிட்ட 42 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதில் 21 விமானங்கள் சென்னையிலிருந்து புறப்படுபவைகள், 21 விமானங்கள் சென்னைக்கு வருபவைகள்.
இவைகள் தவிர சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் இன்று 83 வருகை விமானங்கள், 79 புறப்பாடு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அவைகளும் போதிய பயணிகள் இல்லாமல் காலியாகவே இயக்கப்படுகின்றன. கொச்சி விமானத்தில் 3 பயணிகள்,கோழிக்கோடு 5 பயணிகள், ராஜமுந்திரி 6, விசாகப்பட்டிணம் 7, ஹைதராபாத் 8, திருச்சி, திருவனந்தபுரம் தலா 9 பயணிகள் என்று பல விமானங்கள் சென்னையில் காலியாக பறக்கின்றன. கொரோனா வைரஸ் இரண்டாம் அலையின் கடுமையான தாக்கமே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் சென்னை விமானநிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu