நலிவடைந்த வழக்கறிஞர்கள், குமாஸ்தாக்களுக்கு நிவாரண நிதி : எதிர்கட்சி தலைவர் வலியுறுத்தல்

நலிவடைந்த வழக்கறிஞர்கள், குமாஸ்தாக்களுக்கு நிவாரண நிதி : எதிர்கட்சி தலைவர் வலியுறுத்தல்
X

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி (பைல் படம்)

தமிழகத்தில் கொரோனா பாதிப்பினால் நலிவடைந்த வழக்கறிஞர்கள், குமாஸ்தாக்களுக்கு, தமிழகஅரசு நிவாரணம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இளம் வழக்கறிஞர் சமுதாயத்தினருக்கு கொரோனா பேரிடர் சிறப்பு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு அரசு வழங்காதது மிகுந்த ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில், வழக்கறிஞர்களுக்கு சேமநல நிதி 7 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது, ஆயிரம் இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது உள்ளிட்டவைகளை சுட்டிக்காட்டியுள்ள அவர்,

கொரோனா பேரிடர் காலங்களில் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்கள், குமாஸ்தாக்களுக்கு சிறப்பு நிதியுதவி அறிவிப்பை, முதலமைச்சராக இருந்த போது தாம் வெளியிட்டதை நினைவு கூர்ந்து கூறினார்.

பின்னர் அதிமுக அரசின் சிறப்பான திட்டங்களால், புதிய சட்டக் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் அமைக்கப்பட்டதால், ஏழை மாணவர்கள் சட்டம் பயிலும் கனவு நனவானதோடு, திறமையான இளம் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளில் ஈடுபட வாய்ப்பு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.

நலிவடைந்த வழக்கறிஞர்கள், குமாஸ்தாக்களுக்கு தமிழ்நாடு அரசு உடனடியாக கொரோனா நிவாரண நிதியும், வாழ்வாதார நிதியும் வழங்க வேண்டுமென குறிப்பிட்டுள்ள அவர்,கொரோனா தொற்றால் உயிரிழந்த வழக்கறிஞர்களின் குடும்பங்களுக்கு தலா 50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டுமென அறிக்கையில் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

Tags

Next Story