சுகாதாரத்துறை அமைச்சருக்கு அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்குழு கோரிக்கை
சென்னை : அரசாணை 354 படி அரசு மருத்துவர்களுக்கு ஊதியப்பட்டை நான்கை தரக்கோரி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்டக்குழு கோரிக்கை வைத்துள்ளது.
இதுகுறித்து அவர்கள் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில்,
1. வணக்கம். அரசாணை எண் 293 என்ற பெயரில் உயர் சிறப்பு மருத்துவர்களுக்கு 14 ஆயிரம் ரூபாயும், சிறப்பு மருத்துவர்களுக்கு ஆயிரம் 5000,5500 மற்றும் 1000 ரூபாயும் மாதம் தோறும் ஊதியப்படிகளாக தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2. நாங்கள் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக வைத்துள்ள ஊதியக் கோரிக்கை அரசாணை 354 ன்படி 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு தரப்பட வேண்டும் என்பது தான். இந்த ஊதியப்படிகளை கடந்த போராட்டத்திற்கு முன்னதாகவே அரசு தர இருந்தும், மருத்துவர் லட்சுமி நரசிம்மன் தலைமையில் வேண்டாம் என்று தெளிவாக சொல்லி இருந்தோம்.
3. ஒவ்வொரு அரசு மருத்துவரும் குறைவான ஊதியத்தால் மாதாமாதம் கிட்டதட்ட 40 ஆயிரம் ரூபாய் வருமான இழப்பை சந்தித்து வரும் நிலையில் இப்படி ஒரு அறிவிப்பு இந்த நேரத்தில் அரசு வெளியிட்டது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகவே உள்ளது.
4. 2019 அக்டோபர் மாத இறுதியில் ராஜீவ்காந்தி மருத்துவமனை வாசலில் நாங்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த போது நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த மாண்புமிகு முதல்வர் அடுத்து அமையவிருக்கும் நம் ஆட்சியில் 2009இல் போடப்பட்ட அரசாணைப்படி ஊதிய கோரிக்கை நிச்சயமாக நிறைவேற்றப்படும் என உறுதியளித்த நிலையில் இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
5. ஆம் முதன் முறையாக அரசு மருத்துவர்கள் வரலாற்றில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என ஒவ்வொரு மருத்துவரும் மிகுந்த ஏக்கத்துடன் காத்திருந்தோம். அதுவும் கிட்டத்தட்ட மருத்துவர்கள் அனைவருமே தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்காக வாக்களித்தோம். அதைப்போலவே திமுக ஆட்சி அமைந்ததும் புதிய கோரிக்கை உடனே நிறைவேறும் என மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து இருந்தோம்.
6. ஊதிய கோரிக்கைக்காக பெண் மருத்துவர்கள் உள்ளிட்ட 118 மருத்துவர்கள் கடந்த ஆட்சியில் கடுமையாக தண்டிக்கப்பட்டோம். மேலும் நாட்டிலேயே ஊதிய கோரிக்கைக்காக மருத்துவர் ஒருவர் தன்னுடைய உயிரையே கொடுத்துள்ளார். இவ்வளவு பெரிய விலை கொடுத்த பிறகு தற்போது நாம் அப்பட்டமாக ஏமாற்ற பட்டுள்ளோம்.
7. அண்டை மாநிலங்களான கர்நாடகாவிலும், தெலுங்கானாவிலும் மருத்துவர்களின் ஊதிய கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படுகிறது. மேலும் கொரோனா பேரிடர் சமயத்தில் மருத்துவர்களின் சேவையை அங்கீகரித்து ஹரியானாவில் மருத்துவர்களின் ஊதியம் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டது. ஆனால் இங்கே இத்தனை போராட்டத்திற்கு பிறகும் அப்பட்டமாக எங்களுக்கு நியாயம் மறுக்கப்பட்டுள்ளது.
8. அதுவும் தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா பேரிடரில் உயிரை பணயம் வைத்து பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354 இன் படி ஊதியம் தர வேண்டும் என சுகாதாரத்துறை செயலர், முதல்வரிடமும் தங்களிடமும் கேட்டிருந்தால் மகிழ்ச்சியுடன் நிறைவேற்றி இருப்பீர்கள்.
9. எனவே தாங்கள் உடனடியாக தலையிட்டு முதல்வர் அளித்த வாக்குறுதிப்படி, கலைஞர் ஆட்சியில் போடப்பட்ட அரசாணை 354 ன் படி 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கை வழங்கிட உடனடியாக ஆணை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu