சென்னை: நள்ளிரவில் பெய்த பலத்த மழையால் விமான சேவை பாதிப்பு
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் நேற்று நள்ளிரவிலிருந்து இன்று அதிகாலை வரை இடி,மின்னலுடன் பலத்த மழை பெய்தது.இதன் காரணமாக சென்னை விமானநிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.கத்தாா் நாட்டு தலைநகா் தோகாவிலிருந்து இன்று அதிகாலை 2.20 மணிக்கு 147 பயணிகளுடன் சென்னை வந்த கத்தாா் ஏா்லைன்ஸ் விமானம் பலத்த இடி,மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்ததால்,சென்னையில் தரையிறங்க முடியாமல்,பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
அதைப்போல் துபாயிலிருந்து 133 பயணிகளுடன் அதிகாலை 2.40 மணிக்கு சென்னை வந்த எமரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானமும் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திரும்பி சென்றது.மேலும் அதிகாலை 3.10 மணிக்கு துபாயிலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம்,அதிகாலை 3.25 மணிக்கு கொழும்பிலிருந்து வந்த ஶ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானம் ஆகியவை சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானிலே வட்டமடித்து பறந்து கொண்டிருந்தன.
அதைப்போல் சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய விமானங்களான சிங்கப்பூா்,துபாய்,சாா்ஜா,தோகா,குவைத்,ஹாங்காங்,கொழும்பு உள்ளிட்ட 9 சா்வதேச விமானங்கள் சுமாா் 3 மணி நேரத்திற்கு மேலாக தாமதமாக புறப்பட்டு சென்றன.அதிகாலை 4 மணிக்கு மேல் மழை ஓய்ந்ததும் பெங்களூா் சென்ற விமானங்கள் சென்னைக்கு திரும்பி வந்தன.
சென்னையில் நள்ளிரவில் பெய்த பலத்த மழையால் சென்னை விமானநிலையத்தில் சா்வதேச விமான சேவைகள் பாதிக்கப்பட்டு பயணிகள் கடும் அவதியடைந்தனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu