இரவில் மெரினாவிற்கு வராதீர்கள்! காவல்துறை எச்சரிக்கைக்கு ஓகே சொன்ன நீதிமன்றம்

இரவில் மெரினாவிற்கு வராதீர்கள்! காவல்துறை எச்சரிக்கைக்கு ஓகே சொன்ன நீதிமன்றம்
X

இரவு நேரத்தில் மெரினா கடற்கரை - கோப்புப்படம் 

இரவு நேரத்தில் மெரினா கடற்கரைக்கு வராதீர்கள் என காவல்துறை விடுத்த எச்சரிக்கைக்கு நீதிமன்றமும் ஓ.கே., சொல்லி உள்ளது.

சென்னையை சேர்ந்த ஜலீல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது: சென்னையில் வெயிலின் தாக்கம் 40 டிகிரி செல்சியஸை தாண்டி விட்டது. கடும் வெப்பம் காரணமாக வெப்பக்காற்று வீசுகிறது. பகல் மட்டுமின்றி இரவிலும் வெப்பக்காற்று வீசுகிறது. இந்த வெப்பத்தில் இருந்து தப்ப பொதுமக்கள், குழந்தைகள், பெரியவர்கள் காற்று வாங்க மெரினா பீ்ச்சுக்கு வருகின்றனர்.

சென்னையில் பீச் உள்ளிட்ட பல இடங்களில் 24 மணி நேரமும் கடை திறக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் பீச்சில் உலவும் பொதுமக்களை இரவு 10 மணிக்கே வெளியேற்றி விடுகிறது. யாராவது காற்று வாங்க வந்தால், அவர்களை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தி பாடாய்படுத்தி விடுகின்றனர். எனவே இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்ப காற்று வாங்க வரும் மக்களை இரவு நேரத்தில் பீச்சில் உலவ அனுமதிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த மனுவை தலைமை நீதிபதி (பொறுப்பு) ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது ஷபீக் அமர்வு விசாரணை செய்தது. காவல்துறை தரப்பில் ஆஜரான குற்றவியல் வக்கீல் முனியப்பராஜ் கூறுகையில், ‘நேரக்கட்டுப்பாடு இல்லாமல் மக்களை அனுமதித்தால், தவறுகள், குழப்பங்கள் நடக்க வாய்ப்புள்ளது. மக்கள் கூட்டத்துடன் சமூக விரோதிகள் கலந்து உலாவ அதிக வாய்ப்புகள் உள்ளன. அப்படி மக்களுடன் கலந்து உலாவும் சமூக விரோதிகளால் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும். இதனை தடுக்கவே, சமூக விரோதிகளை கட்டுப்படுத்தவே, மக்களை பாதுகாக்கவே நாங்கள் நேரக்கட்டுப்பாடு விதித்துள்ளோம். மக்களை தடுக்கும் நோக்கம் எதுமில்லை என விளக்கமளித்தார்.

இதனை கேட்ட நீதிபதிகள், ‘காவல்துறையினர்கூறும் காரணம் மிகவுமு் சரியானது. பொதுமக்கள் காவல்துறையினரின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’ எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself