புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமித்தவர்களுக்கு குடிநீர் மின் இணைப்பு துண்டிப்பு: அரசு அதிரடி
பைல் படம்.
சென்னை உள்பட பல பகுதிகளில் அரசின் புறம்போக்கு நிலங்கள் மற்றும் நீர்நிலைகளில் ஆக்கிரமித்து சிலர் வீடுகள் மற்றும் கட்டங்கள், கம்பெனிகள் கட்டி வருகின்றனர். இவர்களுக்கு குடிநீர், மின்சாரம் உட்பட அனைத்து வசதிகளையும் வழங்கப்பட மாட்டாது என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், புறம்போக்கு, அரசு மற்றும் நீர் நிலைகளை ஆக்கிரமித்து விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட கோரியிருந்தது.
இந்த மனு மீது ஏற்கனவே நடைபெற்ற விசாரணைகளின்போது, புறம்போக்கு மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ள கட்டடங்களை அகற்ற மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, ஆதி கேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பஞ்சாயத்து ராஜ் துறை ஆகியவற்றின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தலைமைச் செயலர் முன்னிலையில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற கூட்டத்தில் மிகவும் ஆட்சேபகரமான அல்லது வெள்ளம் வந்தால் பாதிப்பை ஏற்படுத்த கூடிய ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களுக்கு இனி தண்ணீர் இணைப்போ, மின் இணைப்போ வழங்கக் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நீர்நிலைகளை பராமரிக்கும் வருவாய் துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீர்நிலைகள் உள்ள பகுதிகளின் சர்வே எண்களை பதிவுத்துறைக்கு தெரிவிக்கவும், அத்தகைய இடங்களை அரசு இடங்களாக கணக்கில் கொண்டு அவற்றின் மதிப்பை ஜீரோ என நிர்ணயிக்க உள்ளதாகவும், அத்தகைய இடங்களை யாரும் பதிவு செய்ய கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை தசரா விடுமுறைக்கு பின்னர் ஒத்திவைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu