முதல்வர் விழாவில் சிக்கிய சிறைத்துறை காவலர்.. போலி அடையாள அட்டையுடன் கைது..
கைதான வசந்தகுமார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதை முன்னிட்டு, தேனாம்பேட்டை பகுதியில் போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, சென்னை அண்ணா அறிவாலயம் அருகே முதல்வர் பாதுகாப்பு பிரிவு காவலர்கள் (corecell) அணிவது போல சபாரி உடை அணிந்தபடி ஒருவர் அங்கும் இங்குமாக சென்று கொண்டிருந்தார். மேலும், அவர் முதல்வர் பங்கேற்ற விழா மேடை அருகில் வரை சென்று வந்தார்.
இதைத்தொடர்ந்து, அவர் மீது சந்தேகமடைந்த காவல் துறை அதிகாரிகள் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். காவல்துறை அதிகாரிகள் அவரை அழைத்து விசாரித்த போது, சிறைத்துறை காவலர் என தன்னை அவர் அறிமுகப்படுத்திக் கொண்டார்.
இதையெடுத்து, காவல்துறை அதிகாரிகள் அவரை வெளியே அழைத்து வந்து விசாரித்த போது, பொள்ளாச்சி கிளைச் சிறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றுவதும், அவரது பெயர் வசந்தகுமார் (வயது 42) என்பதும் தெரிய வந்தது. மேற்கொண்டு, போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, தனக்கு இன்று விடுமுறை என்பதால் முதல்வரை பார்க்க தனது நண்பர் நாட்ராயனுடன் கோவையில் இருந்து விமானத்தில் சென்னை வந்ததாக தெரிவித்துள்ளார்.
இருப்பினும், சந்தேகமடைந்த காவல் துறை அதிகாரிகள் சிறைத்துறை உதவி ஆய்வாளரான வசந்தகுமாரையும், அவருடன் வந்த நாட்ராயன் என்பவரையும் சோதனையிட்டனர். சோதனையின்போது, சிறைத்துறை உதவி ஆய்வாளர் வசந்தகுமாரின் பையில் தமிழ்நாடு காவல்துறை என்ற பெயரில் அடையாள அட்டை ஒன்று இருந்தது.
இதுதொடர்பாக, அவரிடம் காவல் துறை அதிகாரிகள் தொடர்ந்து நடத்திய விசாரணையில், சிறைக்காவலர் என்றால் பேருந்துகளில் இலவசமாக செல்ல முடியாது என்பதால் தமிழ்நாடு காவல்துறை அடையாள அட்டையை போலியாக தயாரித்து பயன்படுத்தி வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, வசந்தகுமாரை போலீஸார் கைது செய்தனர். அவரது நண்பர் நாட்ராயனை விடுவித்தனர். கைதான வசந்தகுமார் மீது இந்திய தண்டனை சட்டத்தின்படி பொது ஊழியரை போல் ஆள்மாறாட்டம் செய்தல், பொது ஊழியர் பயன்படுத்தும் அடையாள சின்னத்தை மோசடியாக உட்கருத்துடன் அணிந்து கொண்டு செல்லுதல், ஆள் மாறாட்டத்தால் ஏமாற்றுதல், பொய்யான ஆவணங்களை புனைதல், ஏமாற்றும் நோக்கத்தில் பொய்யான ஆவணங்களை புனைதல் ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் தேனாம்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
முதல்வர் பங்கேற்ற ஒருவிழாவில் போலியான அடையாள அட்டையுடன் வசந்தகுமார் வர வேண்டிய அவசியம் என்ன? என்பது குறித்து தேனாம்பேட்டை போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பொள்ளாச்சியில் இருந்து அவர் சென்னை வந்ததற்கான காரணங்கள் குறித்தும் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu