உ..பி. லக்கிம்பூரில் விவசாயிகள் படுகொலை : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்

உ..பி. லக்கிம்பூரில் விவசாயிகள் படுகொலை : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  கண்டனம்
X

பைல் படம்

விவசாயிகளுக்கு எதிராக ஏராளமான பாஜக வினர் வன்முறையில் ஈடுபட்டதில் பத்திரிக்கையாளர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர்

உ..பி. லக்கிம்பூரில் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தவ்ஹீத் ஜமாத் மாநில பொதுச் செயலாளர் இ.முஹம்மது வெளியிட்ட அறிக்கை: இன்று (04.10.2021) உத்தரபிரதேசம் லக்கிம்பூர் பகுதியில் உ.பி. துணை முதல்வர் கேசவ் மவ்ரியா மற்றும் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோர் அரசு விழாவில் பங்கேற்க இருந்தனர். இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல மாதங்களாகியும் வீரியம் குறையாமல் போராடி வரும் விவசாயிகள் கருப்புப் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர்

போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி விவசாயிகள் மீது ஆளும் பாஜக ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனது வாகனம் மோதியதில் 2 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் விவசாயிகளுக்கு எதிராக ஏராளமான பாஜகவினர் ஒன்று கூடி வன்முறையில் ஈடுபட்டனர். இதில் ஒரு பத்திரிக்கையாளர் உட்பட மொத்தம் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.

அறவழியில் போராட்டம் நடத்திய அப்பாவி விவசாயிகளை கொலை செய்திருப்பவர்கள் தான், விவசாயிகள் நலனுக்காக வேளாண் மசோதாவைக் கொண்டு வந்தோம் என்று பேசித் திரிகிறார்கள். இது சாத்தான் வேதம் ஓதியதாகத் தான் நடுநிலையாளர்களால் பார்க்கப்படுகின்றது.

உத்திரபிரதேசத்தில் கொலைகளும், கற்பழிப்புகளும், சிறுபான்மையினர் மற்றும் தலித்கள் மீதான தாக்குதல்களும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. அப்பாவி மக்களின் இரத்தச் சகதியில் தான் யோகியின் காட்டாட்சி அங்கு நடக்கின்றது. கொலைக் குற்றங்கள் நடைபெறுவதில் தேசத்திலேயே உ.பி தான் முதலிடம் வகிக்கின்றது . இது தான் மோடி மற்றும் யோகி அரசின் சாதனை. (?) விவசாயிகளின் மீதான இப்படுகொலையை திட்டமிட்டு நிகழ்த்தியிருக்கும் பாஜக அரசு. அதை மறைப்பதற்கான சூழ்ச்சிகளையும் வழக்கம் போல் அரங்கேற்றி வருகின்றது.

இப்படுகொலையை வெளி உலகத்திற்கு தெரியாமல் மறைப்பதற்காக இணைய தள சேவையை முடக்கியுள்ளது யோகி அரசு.அது மட்டுமல்ல மற்ற தலைவர்கள் விவசாயிகளைச் சந்திப்பதற்குத் தடை விதித்துள்ளது. விவசாயிகளைச் சந்திக்க வந்த பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். அகிலேஷ் யாதவ் போராட்டத்தில் ஈடுபடா வண்ணம் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இப்படுகொலை பற்றிக் கேள்விப்பட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூற வந்த சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் மற்றும் பஞ்சாப் துணை முதல்வர் ஆகிய இருவரின் விமானமும் லக்னோவில் தறையிறங்க அனுமதி மறுக்கப்படுகின்றது.தங்களின் இச்சூழ்ச்சிகளால் விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வரும் என பாஜக தப்புக் கணக்கு போடுகிறது. ஆனால் விவசாயிகளின் மனநிலையைப் பார்த்தால் அவர்களின் போராட்டங்கள் முன்பை விட இன்னும் பன் மடங்கு வீரியமெடுக்கப் போகின்றது என்பதையே காட்டுகின்றது.

பாமர விவசாயிகளின் மீது வாகனத்தை ஏற்றி ஈவு இரக்கமின்றி படுகொலை செய்த பாஜகவின் இந்த இழிசெயலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கின்றது. இச்செயலுக்கு காரணமான ஒன்றிய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா பதவிநீக்கம் செய்யப்பட்டு, அவர் மீது கொலைவழக்கு பதிவு செய்யப்படவேண்டும் எனவும், மேலும் இப்படுகொலைக்குக் காரணமான அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் எனவும் ஒன்றிய அரசையும் நீதித்துறையையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்கின்றது.


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!