மறைந்த இயக்குனர் எஸ். பி. ஜனநாதனின் முழு உருவச் சிலை திறப்பு
மறைந்த திரைப்பட இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன்
மறைந்த இயக்குனர் எஸ் பி ஜனநாதன் முழு உருவ சிலை திறப்பு மற்றும் சினிமாவை பரந்த சிவப்புக் கொடி எனும் நினைவு மலர் வெளியீட்டு விழா சென்னை அடையாரில் உள்ள முத்தமிழ் பேரவை அரங்கில் நடைபெற்றது.
இதில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஜனநாதனின் திருவுருவ சிலையை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர்கள் கரு .பழனியப்பன், அமீர், சுசீந்திரன் உள்ளிட்ட பலர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்
இதில் நல்லக்கண்ணு பேசியதாவது:இயக்குனர் ஜனநாதனின் இயற்கை மற்றும் புறம்போக்கு திரைப்படங்களை பார்த்து அழுதிருக்கிறேன்.பெரிய இயக்குனர் என்ற பிம்பம் இல்லாமல் மக்களோடு மிகவும் எளிமையாக பழக கூடியவர்.ஒடுக்கப்பட்ட மக்களின் கருத்துக்களை எளிமையான முறையில் திரையில் கொண்டு வந்தவர்.படங்கள் பாடமாக இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்தது ஜனநாதனின் படங்கள்.
நடிகர் விஜய்சேதுபதி பேசியதாவது: நான் கம்யூனிசம் படித்ததில்லை. அது பற்றிய அறிவு எனக்கு அதிகம் கிடையாது. கம்யூனிசத்தை செயல் மூலமும், வாழ்ந்தும் காட்டியவர் ஜனாநாதன்.கம்யூனிசம் , பெரியாரியத்தை யார் வேண்டுமானாலும் படிக்கலாம், ஆனால் அதை பின்பற்றி வாழும்போதுதான் அதன் மீது பிடிப்பு ஏற்படும். படங்களில் வார்த்தைகளை பார்த்து பார்த்து விதைப்பார். ஆயிரம் வார்த்தையை 5வார்த்தையில் அடக்குவார். நான் வசனங்களை வேகமாக பேசுவேன். ஆனால் நடிக்கும்போது வார்த்தை தெளிவாக இருக்க வேண்டும் என்று சொல்வார். என் வாழ்வில் நான் செய்த புண்ணியம் அவரது கடைசி படத்தை தயாரித்தது லாபம். அது கடைசி படமாக அமைந்துவிட்டது.
தொல்.திருமாவளவன் பேசியதாவது: திரை உலகம் வணிக நோக்கம் கொண்ட ஊடகம் என்பதை அறிந்தும் தாம் ஏற்றுக்கொண்ட தத்துவதை பேசுவதும் ஒரு துட்பமான அரசியல். அதனை மிகச்சிறப்பாக கையாண்டார் ஜனநாதன். இன்னும் 10 ஆண்டு காலம் அவர் வாழ்ந்து இருந்தால் இடதுசாரிகள் நிச்சயம் புதிய புத்துணர்ச்சி பெற்றிருப்பார்கள். கொள்கை கோட்பாடுகளை தாண்டி தத்துவத்தை பேசுகிற கட்சி கம்யூனிஸ்ட் கட்சி. அந்த தத்துவத்தை திரையில் காட்டுவது மிகவும் கடினமான விஷயம்.சமத்துவம் என்ற கொள்கையை புரிந்து கொண்டால் தான் சமூகநீதி எனும் தத்துவத்தை புரிந்து கொள்ள முடியும்.தத்துவத்தை பேசுகிற போராளியாக விளங்கியவர் இயக்குனர் ஜனநாதன்.
லாபம் என்பதே உழைப்பு சுரண்டல் தான்.முதலாளிகள் செலுத்துகிற முதலீடு தான் மூலதனம் என்று நினைக்கிறோம்,ஆனால் உழைப்பும் மூலதனம் தான். உழைப்பை மூலதனமாக முதலீடு செய்பவர்களுக்கும் பங்கை பகிர வேண்டும்.இந்த அரசியல் புரிதலை வெற்றிகரமாக திரையில் காட்டியவர்இயக்குனர் ஜனநாதன் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu