மெரினா கடற்கரையில் மணல் திருட்டை விசாரிக்க குழு: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
சென்னை மெரினா கடற்கரையில் மணல் திருட்டு குறித்து விசாரிக்க குழுவை நியமிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த மீனவர் நலசங்கத்தை சேர்ந்த செல்வராஜ் குமார் சார்பில் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் மணல் எடுத்திருப்பதும் கட்டிடக் கழிவுகளை கொட்டியிருப்பதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், 1986ன் கீழ் குற்றம் என்பதாலும், சென்னை மாவட்ட ஆட்சியர், தமிழக மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம், தமிழக அரசு மற்றும் பொதுப்பணித்துறையினரை மெரினா கடற்பகுதியில் நடக்கும் மணல் திருட்டை நிறுத்தவும் இதுகுறித்து தீர விசாரித்து தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், மெரினா கடற்கரையில் கொட்டப்பட்ட கட்டிடக் கழிவுகளை அகற்றவும் உத்தரவிடுமாறு கூறப்பட்டிருந்தது.
இந்த மனு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவைப் பரிசீலித்த தீர்ப்பாய உறுப்பினர்கள் இந்த விவகாரம் குறித்து விசாரிக்கக் குழு அமைக்க முடிவு செய்தனர். அப்போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் மணல் திருட்டு நடந்த முகத்துவாரப்பகுதியை சென்னையில் உள்ள ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் துறையை சேர்ந்த மூத்த அதிகாரி, தமிழக கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி, சென்னை மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர், சென்னை மாநகர காவல் ஆணையர் அல்லது அவரால் பரிந்துரைக்கப்படும் அதிகாரி ஆகியோர் கொண்ட குழு நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.
அனுமதியின்றி மணல் திருட்டு நடைபெற்றதா, லாரி, ஜேசிபி போன்ற கனரக வாகனங்கள் நிறுத்தப்பட்டதா, மணல் அள்ளப்பட்டதால் அப்பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகள் என்ன, பாதிப்பிற்கான இழப்பீடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, கடத்தப்பட்ட மணலை பயன்படுத்தியவர்கள் யார் மற்றும் இதுபோன்ற நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டிய வழிகள் குறித்து விரிவான அறிக்கையை வருகிற அக்டோபர் 8ம் தேதிக்குள் தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட குழு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இந்த வழக்கை ஒத்தி வைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu