மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்: திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிலிப்பு
திமுக வேட்பாளர்கள் கிரிராஜன், ராஜேஷ்குமார், கல்யாணசுந்தரம்
மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் கிரிராஜன், ராஜேஷ்குமார், கல்யாணசுந்தரம் ஆகியோரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திமுக ராஜ்யசபா பட்டியல்: தஞ்சை கல்யாணசுந்தரம்: தற்போது தஞ்சை வடக்கு மாவட்ட திமுகவின் பொறுப்பாளராக இருக்கிறார் கல்யாணசுந்தரம். கட்சியில் சீனியரான இவர் சோழமண்டல தளபதி என திமுகவில் வர்ணிக்கப்பட்ட கோசி மணியின் வலதுகரமாக இருந்தவர்.கும்பகோணத்துக்கு அருகே உள்ள பம்ப படையூர் என்னும் கிராமத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் இதுவரை பெரிய சர்ச்சைகளில் சிக்காதவர். கும்பகோணம் வட்டார கிராமங்களில் புருஷன் பொண்டாட்டி பிரச்னையை கூட பேசி முடித்து தீர்வை ஏற்படுத்தி தருபவர் என்று இவரைப் பற்றி மக்கள் குறிப்பிடுகிறார்கள்
கடந்த சட்டமன்ற தேர்தலில் பாபநாசம் தொகுதியை கேட்டிருந்தார் கல்யாணசுந்தரம். ஆனால் அந்த தொகுதி மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவுக்கு திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டு விட்ட நிலையில் கல்யாண சுந்தரத்திற்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. டெல்டா மாவட்டத்திற்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில், மாநிலங்களவை உறுப்பினராக கல்யாணசுந்தரத்தை தெரிவு செய்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.
வடசென்னை கிரிராஜன்: திமுக சட்டத்துறை இணைச் செயலாளரான கிரிராஜன் நீண்ட காலமாக வட சென்னை மக்களவைத் தொகுதியையும் வடசென்னைக்கு உட்பட்ட சட்டமன்ற வாய்ப்புக்கும் முயற்சி செய்தவர். 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வடசென்னை தொகுதி திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார் கிரிராஜன்.கலைஞர் இருந்த போதும், அதற்கு பிறகு ஸ்டாலின் அவர்கள் தலைவராக வந்த பிறகும் சென்னையில் திமுக நிகழ்ச்சிகளுக்கு பெருந்திரளான வழக்கறிஞர்களுடன் அணிவகுப்பவர் கிரிராஜன். மேலும் கட்சியினருக்கான சட்ட உதவிகளையும் சளைக்காமல் செய்பவர். திமுக சட்டத் துறை பிரமுகர்கள் தொடர்ந்து ராஜ்ய சபாவுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களின் வரிசையில் கிரிராஜனும் ராஜ்ய சபாவிற்கு செல்கிறார்.
நாமக்கல் ராஜேஷ்குமார்: நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரான ராஜேஷ்குமார் கடந்த முறை ஒன்றரை வருட ராஜ்யசபா உறுப்பினர் பதவி காலத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்றத்தில் உதயநிதி பெயரை சொல்லி கட்சியினரின் வரவேற்புக்கும் எதிர்க்கட்சியினரின் விமர்சனத்துக்கும் ஆளானவர். இப்போது அவருக்கு முழுமையான ஆறாண்டு கால ராஜ்யசபா வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu