அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 58ஆக குறைக்கும் திட்டம் தள்ளிவைப்பு

அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 58ஆக குறைக்கும் திட்டம் தள்ளிவைப்பு
X

பைல் படம்.

அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 58ஆக குறைக்கும் திட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் சுமார் 9 லட்சம் அரசு ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில், சுமார் 3 சதவீதம் பேர் ஒவ்வொரு ஆண்டும் பணி ஓய்வுபெற்று வருகிறார்கள். அந்த வகையில் ஆண்டு தோறும் சுமார் 27 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறுகிறார்கள்.

ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு உடனுக்குடன் அதற்குரிய நிதி வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு மே மாதம் கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசின் நிதி நிலைமையில் கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் ஓய்வுபெறும் போது அரசு ஊழியர்களுக்கு உடனடியாக நிதி வழங்க இயலாத நிலை ஏற்பட்டது. இதனை சமாளிக்க அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 58-லிருந்து 59 ஆக தமிழக அரசு உயர்த்தி அறிவித்தது.

இந்தநிலையில், கொரோனா பரவல் தொடர்ந்து நீடித்ததால் பொருளாதாரத்தில் எதிர்பார்த்த மேம்பாடு எட்டப்படவில்லை. இதனால், கடந்த பிப்ரவரி மாதம் அப்போதைய முதல்வர் பழனிசாமி, அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59- இருந்து 60 ஆக அதிகரித்து உத்தரவிட்டார்.

கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது அதிகரிக்கப்பட்டதால் தமிழக அரசுக்கு செலவின வகைகளில் பல கோடி ரூபாய் மிச்சமானது. இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக தலைமையில் புதிய அரசு அமைந்ததும் அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது மீண்டும் 58 ஆக குறைக்கப்படப் போவதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியானது.

இதற்கிடையே அரசு தரப்பில் இருந்து ஆலோசனை நடத்தப்பட்டது. அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை மீண்டும் 58 ஆக குறைத்தால் எவ்வளவு பணம் ஒதுக்கீடு செய்ய வேண்டியது இருக்கும் என்று ஆலோசிக்கப்பட்டது. அரசு ஊழியர்களிடமும் இது தொடர்பாக கருத்துக்கள் கேட்கப்பட்டன.

அரசு நடத்திய ஆய்வில், 2020-2021 நிதியாண்டுக்கு அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை உயர்த்தாமல் இருந்து இருந்தால் ரூ.5 ஆயிரம் கோடி கூடுதல் செலவு ஏற்பட்டு இருக்கும் என்பது தெரியவந்தது. அதுபோல நடப்பாண்டில் அதை விட கூடுதல் செலவு ஏற்பட்டு இருக்கும் என்றும் தெரியவந்தது.

இதன் காரணமாக அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 58 ஆக குறைக்கும் திட்டத்தை தள்ளி வைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். எனவே அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 என்பதில் தற்போதைக்கு எந்த மாற்றமும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!